பாகிஸ்தானில் தற்போது முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த மெகா ரன்கள் இலக்கை வெற்றிகரமாக செய்து சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
முத்தரப்பு தொடர் கிரிக்கெட்
கராச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பேட்டிங் செய்ய சாதகமான இந்த ஆடுகளத்தில் தாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நிரூபித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டோனி ஜார்ஜி 22 ரன்னில் வெளியேறினாலும், அணியின் கேப்டன் டெம்பா பவுமா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மூன்றாவது ஆட்டக்காரர் பிரீஸ்க் உடன் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 125 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார்கள். இதில் சிறப்பாக விளையாடிய பவுமா 96 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 82 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் பிரீஸ்க் 84 பந்துகளை எதிர் கொண்டு 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 82 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் கிளாசன் மிடில் வரிசையில் களமிறங்கி 56 பந்துகளை 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 87 ரன்கள் குவிக்க தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அபார வெற்றி
இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான பக்கார் ஜமான் மற்றும் பாபர் அசாம் கூட்டணி முதல் விக்கட்டுக்கு 6 ஓவர்களில் 57 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 23 ரன்னில் வெளியேற, ஷகீல் 15 ரன்னில் நடையை கட்டினார். 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்த பாகிஸ்தான் அணியை மிடில் வரிசை வீரர்கள் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதையும் படிங்க:எல்லாமே நல்லா இருக்கு.. ஆனா எப்படி ஜெயிக்கிறதுன்னு தெரியல.. வேற மாதிரி ட்ரை பண்ணனும் – பட்லர் ஆதங்கம்
இந்தக் கூட்டணி நான்காவது விக்கெட்டுக்கு 229 பந்துகளில் 260 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய கேப்டன் ரிஸ்வான் 128 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் சல்மான் ஆகா 103 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 16 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 134 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலமாக நியூசிலாந்து அணியும் இதில் இடம் பெற்றுள்ள முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.