ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலில் விளையாடி அதை 2-1 எனக் கைப்பற்றியது. தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. அந்த அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரர் ஓமர் யூசுப் 13 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். சையும் அயூப் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். இது தொடர்ந்து உஸ்மான் கான் 30 பந்தில் 39 ரன், தயாப் தாகிர் 25 பந்தில் 39 ரன், இர்பான் கான் 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள்.
புதிய கேப்டன் ஆகா சல்மான் 19 பந்தில் 13 ரன் மட்டுமே எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது.
வெற்றியுடன் ஆரம்பித்த பாகிஸ்தான்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான மருமாணி 20 பந்தில் 33 ரன்கள், கேப்டன் சிக்கந்தர் ராஸா 28 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து ஒன்பது பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : நான் அந்த வீரரை இழந்துட்டேன்.. இனி திரும்ப கிடைக்க மாட்டார்.. கஷ்டமா இருக்கு – ஹர்திக் பாண்டியா பேட்டி
இறுதியாக ஜிம்பாப்வே அணி 15.3 ஓவரில் 108 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அகமது மற்றும் சுபியான் முக்கிம் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். பாகிஸ்தான் அணி 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை தோற்று தோல்வியுடன் ஆரம்பித்த பாகிஸ்தான் அணி தற்பொழுது வெற்றியுடன் டி20 தொடரை ஆரம்பித்திருக்கிறது.






