AUS vs PAK.. தொலைந்த டேவிட் வார்னரின் டெஸ்ட் தொப்பி.. கண்டுபிடிக்க பாகிஸ்தான் கேப்டன் கோரிக்கை

0
1235

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்காக எண்ணற்ற வெற்றிகளை பெற்று தந்த டேவிட் வார்னருக்கு உணர்வுப்பூர்வமான பிரியாவிடை கொடுக்க ரசிகர்களும், ஆஸ்திரேலிய நிர்வாகமும் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கலாச்சாரம் முற்றிலும் இந்தியாவை விடவும் வித்தியாசமானது. அனைத்து விஷயங்களிலும் செண்டிமெண்ட் மற்றும் மரபை பின்பற்றி வருவார்கள்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் போது Baggy Green என்ற பச்சை நிற தொப்பியை அளிப்பார்கள். அந்த வீரர் விளையாடும் அறிமுக போட்டியில் முதல் நாள் முழுக்க அந்த தொப்பியை மட்டுமே அணிந்து ஆடுவார்கள். அதன்பின் அந்த தொப்பியை வாழ்நாள் பொக்கிஷமாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாதுகாத்து பெருமை கொள்வார்கள்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், தான் அறிமுகமான போது வழங்கப்பட்ட தொப்பியை அணிந்து தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட ஆசைப்பட்டுள்ளார். ஆனால் திடீரென பயணத்தின் போது டேவிட் வார்னரின் பேக் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து டேவிட் வார்னர், தவறுதலாக எனது பேக்கை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த பேக்கில் தான் எனது மகள்களுக்காக வாங்கிய பரிசுகள் உள்ளன. அதேபோல் Baggy Green தொப்பியும் உள்ளது.

அந்த தொப்பி எனக்கு உணர்வுப்பூர்வமானது. அந்த தொப்பியுடன் தான் கடைசி முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன். ஒருவேளை எனது பேக் உங்களுக்கு வேண்டுமென்றால், அதேபோல் என்னிடம் மற்றொரு பேக் உள்ளது. தாராளமான அதனை கொடுக்க தயாராக உள்ளேன். உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. தொப்பியை மீண்டும் பெற்றாலே மகிழ்ச்சி தான் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேசும் போது, நாடு முழுவதும் உடனடியாக டேவிட் வார்னர் தொப்பியை தேடி ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட வேண்டும். சிறந்த புலனாய்வு அதிகரிகளை கொண்டு தொப்பியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர்.

என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் ஒவ்வொரு வீரருக்கும் முதல்முறையாக அளிக்கப்படும் தொப்பி எப்போதும் பொக்கிஷமாக இருக்கும். நிச்சயம் டேவிட் வார்னரின் கைகளுக்கு அந்த தொப்பி மீண்டும் வரும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.