தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இதற்கு அடுத்த இரண்டு இடங்களில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் கடைசி ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது புதிய கேப்டனாக அந்த அணிக்கு ஷான் மசூத் நியமிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் மூன்றையும் தோற்று பாகிஸ்தான் பரிதாபமாக நாடு திரும்பியது.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரின் படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இத்தோடு சேர்த்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் என மொத்தம் ஏழு டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் விளையாடுகிறது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் உள்நாட்டில் விளையாட இருக்கும் 7 டெஸ்ட் போட்டிகளையும் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறுவதற்கு முடியும் எனக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஷான் மசூத் பேசும்பொழுது “கில்லஸ்பி, டிம் நீல்சன் மற்றும் கேரி கிரிஸ்டன் என சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தற்பொழுது பாகிஸ்தான் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கிடைத்திருக்கிறார்கள். இவர்கள் இந்த வடிவங்களில் மிகப்பெரிய வீரர்களாக இருந்திருக்கிறார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக நிறைய டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. அந்த இறுதி போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் போகலாம்.
இதையும் படிங்க : பாக் தொடர்.. வலிமையான பங்களாதேஷ் அணி அறிவிப்பு.. சிஎஸ்கே வீரருக்கு இடமில்லை.. சவால் விடும் பாஸ்ட் பவுலர்ஸ்
எங்கள் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் ஏழு டெஸ்ட் போட்டிகளை பயன்படுத்திக் கொள்வதே எங்களது முக்கிய திட்டமாக இருக்கிறது. மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடும் டெஸ்ட் தொடரையும் எங்களால் வெல்ல முடியும். இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்று கூறியிருக்கிறார்.