நாளை இந்தியாவுடனான போட்டியில் இருந்து பாகிஸ்தான் நட்சத்திர வீரர் காயத்தால் விலகல்!

0
187
Pakistan

நடந்து வரும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னணி அணிகளான இந்தியா பாகிஸ்தான் இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் காயத்தால் விலகியது அந்த அணிகளுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் நல்ல கிரிக்கெட் பார்ப்பதற்கு பிரச்சனையாக அமைந்திருக்கிறது!

இந்திய அணியில் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. இதே போல் முழங்கால் காயத்தால் பாகிஸ்தான் அணியின் சாகின் ஷா அப்ரிடியும், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீராவும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை.

- Advertisement -

6 அணிகள் பங்குபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றாக சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. இன்று சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் சார்ஜா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதையடுத்து நாளை துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக பாகிஸ்தான் அணியின் முக்கிய வலக்கை வேகப்பந்து வீச்சாளரான ஷாநவாஸ் தஹானி, உடலின் பக்கவாட்டு காயத்தால் நாளை நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்.

இவர் இந்திய அணியுடனான போட்டியில் பந்து வீச்சில் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் 29 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் பேட்டிங்கில் கடைசியில் வந்து யாருமே எதிர்பார்க்காத படி 6 பந்துகளில் 2 சிக்ஸர்களோடு 16 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்கு நகர்த்தினார். நேற்று ஆங்காங் அணியுடனான ஆட்டத்தில் 2 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டன் ஓவரோடு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

- Advertisement -

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒரு செய்தி குறிப்பில் ” சந்தேகத்திற்கு இடமான உடல் பக்கவாட்டு காயத்தால் ஆசிய கோப்பையில் இந்திய அணியுடனான சூப்பர் 4 சுற்றில் ஷாநவாஸ் தஹானி விளையாட மாட்டார். வெள்ளிக்கிழமை ஆண் காங் அணிக்கு எதிராக சார்ஜா மைதானத்தில் நடந்த போட்டியில் பந்து வீசும் பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி எந்த ஒரு காயம் ஏற்பட்டாலும் 48-72 மணி நேரங்களுக்கு மருத்துவக் குழு அவரை கண்காணிக்கும். அதைத்தொடர்ந்து ஸ்கேன் மற்றும் போட்டியில் பங்கேற்பது குறித்தான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஹசன் அலி இல்லை என்றால் வலக்கை வேகப்பந்துவீச்சாளர் ஹஸ்னைன் இருவரில் ஒருவர் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது!