சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலியை கேலி செய்யும் அளவுக்கு தனக்கு சுதந்திரம் இருந்தது என அப்ரார் அகமது கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் அப்ரார் அகமது சிறப்பாக விளையாடிய கில் விக்கெட்டை சிறப்பான பந்து ஒன்றில் வீழ்த்தினார். இதன் பிறகு அவரை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கண்களால் சைகை செய்தார். இது அந்த போட்டியின் போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமும் இதை கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை மன்னித்து விடுங்கள்
இந்த நிலையில் களத்தில் விராட் கோலிக்கு பந்து வீசியபோது என்ன நடந்தது? என்றும், கில் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு தான் ஏன் அவ்வாறான கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன்? என்பது குறித்தும் அப்ரார் அகமது மிகவும் வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அப்ரார் அகமது கூறும் பொழுது “கில் விக்கெட்டை வீழ்த்தி விட்டு நான் கொண்டாடிய விதம் நான் வழக்கமாக கொண்டாடுகின்ற முறையாகும். அதில் நான் எதையும் தவறாக உணரவில்லை. மேலும் அதிகாரிகளும் அது தவறு என்று என்னிடம் சொல்லவில்லை. ஆனாலும் யாரையாவது அது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடவும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை”
விராட் கோலியை கிண்டல் செய்தேன்
“விராட் கோலிக்கு பந்து வீச வேண்டுமென்பது என்னுடைய சிறுவயது கனவு. அது துபாயில் நிறைவேறியது. அவருக்கு பந்து வீசுவது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. மேலும் களத்தில் நான் அவரை கிண்டல் செய்யும் அளவுக்கு எனக்கு சுதந்திரம் இருந்தது. நான் அவரை எனது பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க சொன்னேன். ஆனால் அவர் என்னிடம் ஒருபோதும் கோபப்படவில்லை. விராட் கோலி ஒரு சிறந்த பேட்டர் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதேபோல அவர் சிறந்த மனிதரும் கூட!
“இந்த குறிப்பிட்ட போட்டி முடிவடைந்த பிறகு அவர் என்னிடம் நான் நல்ல முறையில் பந்து வீசியதாக கூறினார். அந்த நாள் என்னுடைய நாளாக அப்பொழுது மாறியது. நான் விராட் கோலியை ஐடியலாக கொண்டு வளர்ந்தவன். நான் 19 வயதுக்கு உட்பட்ட அணியில் விளையாடி கொண்டு இருந்த பொழுது, ஒரு நாள் அவருக்கு எதிராக நான் பந்து வீசுவேன் என்று கூறிக் கொண்டிருந்திருக்கிறேன்”
இதையும் படிங்க : 25 ரன்னா 25 ஓவரா?.. ரோகித் கிட்ட கம்பீர் இத சொல்லணும்.. எல்லாம் மாறனும் – சுனில் கவாஸ்கர் அறிவுரை
“விராட் கோலி அவர்களின் உடல் தகுதி மிகவும் சிறப்பானது. அவர் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்கள் ஓடும் விதம் கண்ணை கவரக்கூடியது. அதுவே அவரை ஒரு தனித்துவமான வீரராக மாற்றுகிறது” என்று மிகவும் வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும் இவர் தற்போது பாகிஸ்தான் அணிக்கு நல்ல சுழல் பந்துவீச்சாளர் இல்லை என்கின்ற குறையை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தீர்க்கக் கூடியவராகவும் உருவாகி இருக்கிறார்.