தற்போது கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை இந்தியா சாம்பியன்ஸ் அணி வென்றது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியை பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வென்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி பந்து வீசியது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு ஆரோன் பின்ச் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. சோயப் மாலிக் மற்றும் ஷாஹித் அப்ரிடி தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு பாகிஸ்தான் லெஜெண்ட் வீரர்கள் யூனுஸ் கான் 41 பந்தில் 63 ரன்கள், மிஸ்பா உல் ஹக் ஆட்டம் இழக்காமல் 30 பந்தில் 46 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மூத்த வீரர்களின் மிடில் வரிசையில் பொறுப்பான ஆட்டத்தை பார்க்க அசத்தலாக இருந்தது. தற்போது விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்களை விட, ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட இவர்களது பேட்டிங் சரியான திட்டத்துடன் அவ்வளவு ஒழுக்கமாக அற்புதமாக இருந்தது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற யூனுஸ் கான் பேசும்பொழுது ” நாங்கள் டி20 உலகக் கோப்பைக்கு தொலைக்காட்சி வேலைகளில் மிகவும் மும்முரமாக இருந்தோம். இதனால் இந்த தொடருக்கு எங்கள் அணிக்கு தயாராவதற்கு சரியான நேரம் கிடைக்கவில்லை. நாங்கள் உலகக் கோப்பை வேலைகளை முடித்துக் கொண்டு இங்கு வந்தோம். ஆனாலும் எங்களுடைய உற்சாகம் அதிகமாக இருந்தது. ஏனென்றால் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வெளியேறியது. இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி எங்கள் நாட்டிற்காக வெற்றி பெற வேண்டும் என்று உணர்ந்தோம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : டபுள் போனஸ்.. தல தோனியின் 43வது பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. சிறப்பு ஏற்பாடு
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணி இடம் தோற்று பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியது. தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியை கொடுப்பதற்காக முன்னாள் வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி முயன்று வருவது, ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நெகிழ்வாக அமைந்திருக்கிறது.






