நாளை பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் வெளியிட்டு இருக்கிறது.
இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி பெற்ற முதல் வெற்றி என்பது இது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் சூழ்ந்த விமர்சனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு உலக கோப்பைகளை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் மிக மோசமாக விளையாடி தோற்று வெளியேறியிருந்தது. இந்த இரண்டு பெரிய தோல்விகளும் வெளிநாட்டில் வந்ததால் விமர்சனங்கள் பெரிய அளவில் இருந்தாலும் அது அணியைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் இருந்தது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக தற்போது டெஸ்ட் தோல்வி உள்நாட்டில் வந்திருக்கின்ற காரணத்தினால் விமர்சனங்களை பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருக்கிறது. இதன் காரணத்தால் இரண்டு அதிரடியான முடிவுகளை 12 பேர் கொண்ட அணி அறிவிப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்திருக்கிறது.
ஷாகின் அப்ரிடி நீக்கம்
நாளை துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியை அதிரடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் நீக்கி இருக்கிறது. அதே நேரத்தில் ஷாகின் அப்ரிடிக்காக வெளியே அனுப்பப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் மிர்சா ஹம்ஸா என இன்னொரு சுழல் பந்துவீச்சாளரும் அழைக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 12 பேர் கொண்ட அணியில் இருந்து நாளை இறுதியாக 11 பேர் கொண்ட அணி வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடியை உள்நாட்டில் நடைபெறும் ஒரு போட்டி ஒன்றில் நீக்கி இருப்பது பாகிஸ்தான் தாண்டி வெளியிலும் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை ஆரம்பத்தில் ரோகித் ஹர்திக் பேசவில்லை.. சேர்த்து வைத்தது இவர்தான் – பத்திரிக்கையாளர் வெளியிட்ட தகவல்
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி :
ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல் (து.கே), முகமது ரிஸ்வான் (வி.கீ ), அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் ஆசம், ஆகா சல்மான், நசீம் ஷா, குர்ரம் ஷாஜாத், முகமது அலி, அப்ரார் மற்றும் அகமது, மிர் ஹம்சா.