ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது ஹாங்காங்கில் ஆறு வீரர்களை மட்டுமே கொண்டு விளையாடப்படும் ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் என்கின்ற தொடர் நடத்தப்படுகிறது. இதில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்திய அணி வீரர் அதிரடி
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஒரு அணியில் ஆறு வீரர்கள் இடம் பெறுவதோடு போட்டியும் ஆறு ஓவர்கள் கொண்டதாகவே நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்த கேப்டன் ராபின் உத்தப்பா 8 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள், இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பரத் சிப்லி பதினாறு பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்தார்கள்.
இதற்கு அடுத்து கேதார் ஜாதவ் 3 பந்தில் 8 ரன், மனோஜ் திவாரி 7 பந்தில் 17 ரன், ஸ்டூவர்ட் பின்னி 2 பந்தில் 4 ரன் எடுத்தார்கள். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஆறு ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் கேப்டன் ஃபாஹிம் அஷ்ரப் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி அபார வெற்றி
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் முகமது அக்லாப் 12 பந்தில் 40* ரன் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஆசிப் அலி 14 பந்தில் 55 ரன் எடுத்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் பாஹிம் அஷ்ரப் 5 பந்தில் 22 ரன் எடுத்தார்.
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட் தொடர்.. அவசியமான போட்டியை ரத்து செய்த பிசிசிஐ.. இந்திய அணிக்கு உருவாகும் புது திட்டம்
பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஓவர்கள் மற்றும் ஆறு வீரர்கள் என நடத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகவும் வித்தியாசமானதாகவும் அமைந்திருக்கிறது!






