17.3 ஓவர்.. கனடாவை வென்ற பாகிஸ்தான்.. 2வது சுற்றுக்கு தகுதிபெற முக்கிய 3 விஷயங்கள்

0
893
Pakistan

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான போட்டியில் கனடா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதிய போட்டி நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பாக இந்த முறை விளையாடிய பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றமாக இப்திகார் அகமது நீக்கப்பட்டு, இளம் துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த அனுபவமற்ற கனடா அணியில் ஏழு பேர் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. ஆனால் அதிசயத்தக்க வகையில் கனடா அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்சன் 44 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்தார். கலீம் சனா ஆட்டம் இழக்காமல் 14 பந்தில் 13 ரன் எடுத்தார். 20 ஓவர்களில் கனடா அணி 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. முகமது அமீர் மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முதல் வாய்ப்பை பெற்ற சையும் அயூப் 12 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் பாபர் அசாம் 33 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் முகமது ரிஸ்வான் உடன் இணைந்து 62 பந்துகளில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இதற்கு அடுத்து வந்த பகார் ஜமான் 6 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற முகமது ரிஸ்வான் 53 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க, 17.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் அந்த அணி இன்னும் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து உலக கோப்பையை ஜெயிக்காது.. 2019 அந்த பார்முலா வேணும் – மைக்கேல் வாகன் விமர்சனம்

பாகிஸ்தான் அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் கடைசி போட்டியில் அயர்லாந்து அணியை அவர்கள் வெல்ல வேண்டும். அதேபோல் அமெரிக்க அணியை முதலில் இந்தியா வெல்ல வேண்டும் அடுத்து அயர்லாந்து வெல்ல வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் நடந்தால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.