27 ரன்கள் 4 விக்கெட்.. ஒரே நாளில் 13 விக்கெட்.. பரபரப்பான கட்டத்தில் ஆஸ்திரேலியே பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி

0
197

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. லபுஷேன் 44 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், மறுமுனையில் நின்றிருந்த லபுஷேன் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து மிட்சல் மார்ஷ் அதிரடியாக ரன்களை குவிக்க, ஆஸ்திரேலியா அணி 250 ரன்களை கடந்தது. பின்னர் லபுஷேன் 63 ரன்களிலும், கேரி 4 ரன்களிலும், மிட்சல் மார்ஷ் 41 ரன்காளில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இறுதியாக ஆஸ்திரேலியா அணி 96.5 ஓவர்களில் 318 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஜமால் 3 விக்கெட்டுகளையும், ஷாகின் அப்ரிடி, மிர் ஹம்சா மற்றும் ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்பின் பாகிஸ்தான் அணி தரப்பில் அப்துல்லா ஷஃபீக் – இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இருவருமே எந்த அவசரமும் இல்லாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புதிய பந்து ஓரளவிற்கு பழையதாக மாறிய நிலையில், இமாம் உல் ஹக் ரன்கள் சேர்க்க முயன்று 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் அப்துல்லா ஷஃபீக் – கேப்டன் ஷான் மசூத் கூட்டணி இணைந்து ஆஸ்திரேலியா பவுலர்களை வெளுத்து கட்டியது. இவர்கள் இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர்.

சிறப்பாக ஆடிய அப்துல்லா ஷஃபீக் அரைசதம் கடந்த நிலௌயில், கம்மின்ஸின் அபாரமான கேட்சால் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த பாபர் அசாம் கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டாகி ஆட்டமிழக்க, சக்கீலும் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து லயனின் சுழலில் ஷான் மசூத்தும் 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பாகிஸ்தான் அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பக்கம் இருந்த ஆட்டம், வெறும் 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால், ஆஸ்திரேலியா அணி பக்கம் திரும்பியது. இதன்பின் முகமது ரிஸ்வான் களமிறங்கி சிறப்பாக பவுண்டரிகளை விளாசி வேகமாக ரன்களை சேர்த்தார். ஆனால் தொடர்ந்து வந்த ஆகா சல்மான் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியாக இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. களத்தில் ரிஸ்வான் 29 ரன்களுடனும், ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இன்னும் 4 விக்கெட்டுகள் இருக்கும் சூழலில், பாகிஸ்தான் அணி நாளைய நாளின் முதல் செஷன் முழுக்க ஆடினாலே நிச்சயம் வெற்றிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ள முடியும் என்று பார்க்கப்படுகிறது.