2022 ஐ.பி.எல் 15-வது சீசனின் 16-வது போட்டி, மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், குஜராத், பஞ்சாப் அணிகளுக்கு இடையே, ஒரு ஹை-ஸ்கோரிங் திரில்லிங் மேட்ச்சாக நேற்று நடந்து முடிந்திருக்கிறது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வாலின் பஞ்சாப் டீமை பேட் செய்ய அழைத்தார். இந்த முறையும் மயங்க் அகர்வால் ஏமாற்றி பெவிலியன் போனாலும், லிவிங்ஸ்டன் அடித்தாட தவான் ஒத்துழைப்பு தர, ஒருமுனையில் உறுதியாய் நின்றுகொண்டார்.
ஆனாலும் பஞ்சாப் வேகமாய் ரன்கள் அடித்து, அதைவிட வேகமாய் விக்கெட்டுகளை விடும் பழக்கத்தை விடவில்லை. 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 124 என்று, 200 ரன்களுக்கு மேல் அடிப்பார்களென்று இரசிகர்கள் நினைத்திருக்க, 18-வது ஓவரில் 162 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் காலி. இதில் ஒழுங்காய் விளையாடியவர் லிவிங்ஸ்டன் மட்டுமே. 27 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். கடைசிக்கட்டத்தில் ராகுல் சஹரும் அர்ஸ்தீப் சிங்கும் 13 பந்துகளில் 27 ரன்கள் அடிக்க, பஞ்சாப் 189 என்ற ரன்களை எட்டி நின்றது!
பின்பு 190 ரன்களை இலக்காகக் கொண்டு, குஜராத் அணிக்காக களமிறங்கிய துவக்க ஆட்டக்காரர்களில் மேத்யூ வேட் வழக்கம்போல் நடையைக் கட்டினாலும், மற்றுமொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லின் ஆட்டம் ஓவருக்கு ஓவர் குஜராத்தை வெற்றியை நோக்கித் தள்ளியது. அவருடன் இணைந்த அறிமுக வீரரான தமிழகத்தின் சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக விளையாடி 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவரது பொறுப்பான துல்லியமான ஆட்டம் அறிமுக வீரர்போலவே இல்லை.
ஒருபுறம் பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தாலும் கடைசி ஐந்து ஓவர்களில், ஓவருக்கு 12 என்று தேவை அதிகரித்திருந்தது. இந்த நேரத்தில் களம் கண்ட கேப்டன் ஹர்திக் சுமாராய் தாக்க, ஒருபுறம் சுப்மன் கில் களைப்படைய ஆரம்பித்திருந்தார். ஆனால் பஞ்சாப்பின் பாஸ்ட்-பவுலர் அர்ஸ்தீப் உக்கிரமாய் இருந்தார். ஆட்டத்தின் 16வது, 18வது ஓவரை வீசிய அவர் விட்டுத்தந்த ரன்கள் வெறும் 9 மட்டுமே.
இதனால் அடுத்த இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட, 19-வது ஓவரின் கடைசிப் பந்தில் கில் 96 [59] ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் வர, இப்போது கடைசி ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை. பஞ்சாப்பின் பிரதான நான்கு பந்து வீச்சாளர்களும் தங்களின் நான்கு ஓவர்களை வீசி முடித்திருக்க, மயங்க் பந்தை தருவதற்கு ஓடியன் ஸ்மித் மட்டுமே இருந்தார். எனவே அவரே ஆட்டத்தின் பரபரப்பான கடைசி ஓவரையும் வீசினார்.
முதல் பந்து வைடு. திரும்ப வீசப்பட்ட முதல் பந்து டாட் பந்து ஆனால் ஹர்திக் பாண்ட்யா ரன் அவுட். இரண்டாவது பந்தில் திவாட்டியா ஒரு ரன். மூன்றாவது பந்தில் டேவிட் மில்லர் பவுண்டரி. இப்போது வெற்றிக்கு மூன்று பந்தில் தேவை 13 ரன்கள். ஆனால் ஓடியன் ஸ்மித் நான்காவது பந்தை டாட் பந்தாக வீசியும், அதில் ரன் அவுட் வாய்ப்பே இல்லாதபொழுது, அவரே ஸ்டம்பிற்கு த்ரோ அடித்து, ஓவர் த்ரோவில் ஒரு ரன் தர, ஆட்டத்தையே பஞ்சாப் தோற்க வேண்டியதாய் போய்விட்டது.
ஆம் அந்த ஒரு ரன்னால் இரண்டு பந்துகளுக்கு இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது, நான்-ஸ்ட்ரைக்கில் இருந்த திவாட்டியா, ஸ்ட்ரைக்கிற்கு போனார். பின்பு இரண்டு சிக்ஸர்களையும் அடித்து அணியை வெற்றிபெற வைத்துவிட்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத்தும் வென்றுவிட்டது. இதற்கு முன் கடைசி இரு பந்தில் ஐ.பி.எல்-ல் சிக்ஸ் அடித்து வென்றவர் மகேந்திர சிங் தோனி. அதுவும் இதே பஞ்சாப் அணியுடன்தான். அடுத்து திவாட்டியா ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர் அடித்ததும் பஞ்சாப் அணியுடன்தான். இதேபோல கரீபியன் பவுலரின் ஓவரில்தான் அடித்தார்