சரியான ரன் ரேட் யாரும் சொல்லல.. அநியாயமா தோக்க வச்சிட்டாங்க.. ஆப்கான் பயிற்சியாளர் வேதனை!

0
4509
Afghanistan

இதுவரை நடைபெற்ற 15 ஆசியக்கோப்பை தொடர்களில் இதுவரை நடக்காத அளவுக்கு, பார்த்தவர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்த போட்டியாக, நேற்று இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது!

நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோற்றால் கூட குறிப்பிட்ட ரன் வித்தியாசத்தில் தோற்றால், அல்லது குறிப்பிட்ட பந்துகள் வித்தியாசத்தில் தோற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது!

- Advertisement -

அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றே ஆக வேண்டும், மேலும் குறிப்பிட்ட நல்ல ரன் ரேட்டில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்கின்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் நேற்று போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணி 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்து 291 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 292 ரன்களை 37.1 ஓவரில் எடுத்தால் அடுத்த சுற்றுக்கு வெற்றி பெற்று நுழையலாம் என்ற ரன் ரேட் கணக்கீடு போட்டி நடுவரால் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் இலங்கை அணி இடம் இருந்து ஆட்டத்தை பறித்து வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தது.

இந்த நிலையில் 36-வது ஓவர் முடிந்திருந்தபொழுது 15 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரில் ரஷித் கான் மொத்தம் 12 ரன்கள் எடுத்தார். இதனால் கொடுக்கப்பட்டதில் இன்னும் ஒரே ஒரு பந்து மீதம் இருந்தது. இந்தப் பந்தில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் அடுத்த சுற்றுக்கு தகுதி என்கின்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் அந்தப் பந்தைச் சந்தித்த முஜீப் தூக்கி அடித்து அவுட் ஆனார். அத்தோடு ஆப்கானிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து போனதாக அந்த அணி நிர்வாகம் கருதியது. எனவே அடுத்து வந்த பேட்ஸ்மேன் பந்தை அடிப்பதற்கான முயற்சி செய்யவில்லை. மேலும் அவர் அதே ஓவரில் ஆட்டம் இழக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி தோல்வியும் அடைந்தது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் 292 ரன்கள் எடுத்தால் மட்டுமல்ல, 37.3 ஓவரில் 296 ரன்கள் எடுத்தாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்க முடியும் என்று ரன் ரேட் கூறுகிறது. அதாவது அடுத்த இருந்த பந்துகளுக்கு இரண்டு ரன்கள் எடுத்து, ஸ்கோரை சமன் செய்து, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்று இருந்தால் கூட, ஆப்கானிஸ்தான் அணியால் அடுத்த சுற்று நுழைந்திருக்க முடியும். ஆனால் இந்த கணக்கு தெரியாமல் ஆப்கானிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் “அந்த கணக்கீடுகள் எங்களுக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. எங்களிடம் 37.1 ஓவரில் அந்த ரன்னை எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று தான் சொல்லப்பட்டது. நாங்கள் எந்த ஓவரில் 295 அல்லது 297 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்பது குறித்து எங்களுக்கு சொல்லப்படவில்லை!” என்று பரிதாபமாகக் கூறியிருக்கிறார்!

- Advertisement -