நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு நான்காவது அணி யாரென்ற பரபரப்பான தேடல் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்து, அரை இறுதிக்குள் வந்து விட்டார்கள்.
இந்த நிலையில் நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நான்காவது இடத்திற்கு தற்பொழுது போட்டியிட்டு வருகின்றன.
இந்த மூன்று அணிகளும் தலா எட்டு போட்டிகளில் விளையாடி தலா நான்கு போட்டிகளை வென்று இருக்கின்றன. எல்லோருமே தங்களுடைய கடைசி ஆட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
அதே சமயத்தில் நியூசிலாந்து அணி இன்று பெங்களூர் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து பெரிய முன்னிலை பெற்று 10 புள்ளிகளுடன் நிற்போம். எனவே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் கடைசி போட்டியில் வென்றால் கூட பெரிய அளவில் வென்றால் மட்டுமே அரையிறுதி சாத்தியம்.
ஆனால் நியூசிலாந்துக்கு தற்பொழுது மழை பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூரில் விளையாடிய போட்டியிலும் மழை வந்தது. மேலும் இன்று இலங்கைக்கு எதிராக அதே பெங்களூரில் விளையாடும் பொழுதும் மழை வாய்ப்பு மிக அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இர்பான் பதான் கூறும்பொழுது “நியூசிலாந்துக்குத்தான் வெற்றி வாய்ப்பு மிக அதிகம். இப்போது அவர்களுக்கு ஒரே பிரச்சனை மழை. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே மழை கைக்கொடுத்திருக்கிறது. பெங்களூர் மழை மீண்டும் அவர்களுக்கு உதவுமா என்று பார்க்க வேண்டும்.
இந்த ஆடுகளத்தில் இலக்கை துரத்துவது எப்பொழுதும் சுலபமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் நியூசிலாந்துக்கு டாஸ் முக்கியமானது.மேலும் நிறைய காரணிகள் இருக்கின்றன. ஆனால் எல்லா சிரமங்களையும் தாண்டி நியூசிலாந்து அரை இறுதிக்கு வரும். பாகிஸ்தான் வருவது கடினம்.
இலங்கை அணியை பொறுத்தவரை தற்பொழுது கொஞ்சம் உந்துதலாக இருக்கிறார்கள். நியூசிலாந்து வெற்றி வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறது. ஆனாலும் இலங்கையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது!” என்று கூறி இருக்கிறார்!