நினைத்தபடி ஐபிஎல் கோப்பையை வென்று விட்டேன் ; இனி என்னுடைய அடுத்த இலக்கு இதுதான் – ஹர்திக் பாண்டியா விருப்பம்

0
89
Hardik Pandya GT

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் இறுதிபோட்டி நேற்று இரவு நடன, இசைக்கச்சேரியோடு கோலாகலமாக ஆரம்பித்து நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஐ.பி.எல் சீசனில் இரு புதிய அணிகள் பங்கேற்க, சென்னை, மும்பை சாம்பியன் அணிகள் முதல் முறையாக ஒருசேர ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது, நட்சத்திர இந்திய வீரர்கள் சோபிக்காமல் அதிர்ச்சியளிக்க, இளம் இந்திய வீரர்கள் அசத்தியது என பல வித்தியாசமான அனுபவங்கள் இரசிகர்களுக்குக் கிடைத்தது!

நேற்றைய இறுதிபோட்டிக்கான டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன். அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வைத்திருக்கும் ஜோஸ் பட்லர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி ரன் எடுத்துக் கொடுத்தார். அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. இதனால் இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 130 ரன்களே எடுத்தது. குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நான்கு ஓவர்கள் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி பதினேழு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.

இதையடுத்து 131 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் துவக்க ஆட்டக்காரர்களில் சுப்மன் கில் நேற்று அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருந்தார். அவர் தந்த கேட்ச் வாய்ப்புகளையும் பிடிக்க முடியவில்லை, அவருக்கு எட்ஜ் எடுத்த பந்துகளும் பவுண்டரிகளாய் மாறின. விருதிமான் சஹா, மேக்யூ வேட் சீக்கிரத்தில் வெளியேற, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா சுப்மன் கில்லோடு இணைந்து 63 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து வெளியேறினார். இதற்கடுத்து வந்த டேவிட் மில்லர் 19 பந்தில் 32 ரன் என்று அதிரடி காட்ட, 18.1 ஓவரில் சிக்ஸர் அடித்த குஜராத் அணியை வெல்ல வைத்தார் சுப்மன் கில். தொடருக்குப் புதிய அணியாக வந்து கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது குஜராத் அணி.

குஜராத் அணியில் வெற்றியில் அணியில் இடம்பெற்ற எல்லா வீரர்களுக்கும் பங்கிருந்தாலும், கேப்டனாக பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஹர்திக் பாண்ட்யா முன்னே நின்று அணியை வழிநடத்தியது மிகச் சிறப்பான விசயமாக அமைந்து இருக்கிறது. நேற்றைய இறுதி ஆட்டத்திலும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

போட்டி முடிந்து பேசிய ஹர்திக் பாண்ட்யா “என்ன நடந்தாலும் இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். அதற்காக என் திறனின் மொத்தத்தையும் கொடுக்கப் போகிறேன். நான் எப்போதும் விளையாடும் அணிக்கு முதலிடம் கொடுக்கும் பையனாகவே வளர்ந்தேன். என் இலக்குகளும் ரொம்ப எளிமையாக இருக்கும். நிச்சயம் இதை இந்திய அணி எட்டும். எத்தனை முறை விளையாடி இருந்தாலும், இந்திய அணிக்காக விளையாடுவது என்பது கனவு நனவாகும் தருணம்தான். கிடைத்திருக்கும் அன்பு ஆதரவை ஒரு இந்தியன் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறேன். நீண்ட காலமோ, குறுகிய காலமோ இலக்கு என்று இருக்கிறது. என்ன நடந்தாலும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்!