இந்த ஆண்டு 2024 17வது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி எதிர்கால இந்திய கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியவராகஇருக்கிறார். இவருக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 2 அரை சதங்கள் உடன், 33 ஆவரேஜ் மற்றும் 142 ஸ்டிரைக் ரேட்டில் 303 ரன்கள் குவித்ததுடன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு இவரை உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
இந்த நிலையில் இவர் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டதன் காரணமாக தொடரில் இருந்து விலகினார். தற்போது இவருடைய இடத்தில் சிவம் துபே விளையாடுகிறார்.
இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என நிதீஷ் குமார் ரெட்டி கூறும் பொழுது “கேப்டன் பாட் கம்மின்ஸ் அணியில் இணைந்த பொழுது நான் நன்றாக பேட்டிங் செய்வதாக கூறினார். நான் பயிற்சி போட்டியில் விளையாடியதை கூட அவர் பார்க்கவில்லை. எனவே இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருக்க அவரிடம் இது குறித்து கேட்டேன். அதற்கு அவர் நான் விளையாடுவதை யூட்யூபில் பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்னார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்ததோடு நல்ல பூஸ்ட்டாக இருந்தது.
நான் விளையாடும் அணி நெருக்கடியில் இருக்கும் பொழுது சிறப்பாக விளையாடி மீட்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தேன். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கிடைத்தது. அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். சுழல் பந்துவீச்சாளர்கள் எப்படி வருவார்கள் என்று உணர்ந்து அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினேன். அந்த மாதிரியான சூழ்நிலையில் விளையாடியது என்னுடைய நம்பிக்கையை அதிகரித்தது.
இதையும் படிங்க : எனக்கு கோட் பிளேயர்னா இந்த இந்திய வீரர்தான்.. கன்சிடென்சினா இந்த ஆஸி வீரர்தான் – ரெய்னா வியப்பான தேர்வு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்னை இந்த முறை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் நானும் உள்நாட்டு டி20 தொடரில் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போய்விட்டேன். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக என்னை தக்க வைத்தார்கள். என் மீது அவர்கள் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.






