தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது இலங்கை அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு நியூசிலாந்து சென்று இருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என இலங்கை அணி இழந்தது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
சுருண்ட இலங்கை அணி
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் பதும் நிஷாங்க 9 ரன் எடுத்து வெளியேற, இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாடோ 63 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் 2, கமிந்து மெண்டிஸ் 3, கேப்டன் சரித் அசலங்கா 0 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். கடைசி கட்டத்தில் ஜனித் லியாங்கே 36, விக்கிரமசிங்கே 22, வனிந்து ஹசரங்கா 35 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் மேட் ஹென்றி 4, ஜேக்கப் டஃபி மற்றும் நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
நியூசிலாந்து அதிரடி வெற்றி
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 12.3 ஓவரில் 91 ரன்கள் அதிரடியாக பார்ட்னர்ஷிப் வந்தது. ரச்சின் ரவீந்தரா 36 பந்தில் அதிரடியாக 45 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றி முதல் 12 ஓவர்களிலேயே மிகவும் எளிதானதாக மாறியது.
இதையும் படிங்க : ஒரு ஓவர் இருக்கு.. நான் சொன்னதை அவருக்கு செய்யுங்க.. ஆஸி வீரரை வீழ்த்த பும்ராவிற்கு ஐடியா கொடுத்த கோலி
இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் ஆட்டம் இழக்காமல் 86 பந்தில் 90 ரன், சாப்மேன் 26 பந்தில் 39 ரன் எடுத்தார்கள். இறுதியாக நியூசிலாந்து அணி 26.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை மண்ணில் இந்த முறை அடைந்த தோல்விகளுக்கு நியூசிலாந்து அணி தங்களது மண்ணில் பதிலடி கொடுத்து வருகிறது!






