கடைசி நிமிடத்தில் டிராவில் முடிந்த நியூசிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட்!

0
445
Pak vs Nz

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைந்து இருந்தது!

இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு முன் கராச்சி மைதானத்தில் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கான்வே அடித்த 122 ரன்கள் சதத்துடன் முதல் இன்னிங்ஸில் 449 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி சவுத் சகீல் 125 ரன் சதத்துடன் முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் டாம் லாதம், டாம் ஃப்ளூன்டல், பிரேஸ் வெல் ஆகியோரது அரை சதங்களோடு இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து நேற்று நான்காவது நாள் டிக்ளேர் செய்தது.

பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 319 ரன்கள் இலக்கை நோக்கி நேற்று மூன்று ஓவர்கள் இருக்கும் பொழுது களம் இறங்கியது. இந்த மூன்று ஓவரில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபிக்யூ மற்றும் நைட் வாட்ச்மேன் மிர் ஹம்சா 20 விக்கட்டையும் ரன்கள் எடுக்காமல் விட்டது.

கடைசி நாளான இன்று பாகிஸ்தான் அணி கைவசம் எட்டு விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு 319 ரன் இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தது. பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் 12, கேப்டன் பாபர் ஆஸம் 27, ஷான் மசூத் 35, சவுத் ஷகீல் 32, ஆஹா சல்மான் 30 ரன்கள் எடுத்து வெளியேற, இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக இந்த தொடர் முழுவதும் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் சப்ராஸ்கான் சதம் அடித்து அசத்தினார்.

எட்டு விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு கடைசியில் எட்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுது வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சர்ப்ராஸ் கானுடன் களத்தில் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா இருந்தார். இரண்டு விக்கெட்டுகளை எடுத்தால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி, மேற்கொண்டு 30 பிளஸ் ரண்களை அடித்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் டெஸ்ட் போட்டியின் உண்மையான சுவாரசியத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது.

இப்படி பரபரப்பான நேரத்தில் சதம் அடித்து இருந்த சர்ப்ராஸ்கான் 112 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தின் அனல் பெரும் நெருப்பாக மாறியது. ஆனால் ஆசியக் கோப்பை போட்டியில் இரு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி உடன் வெற்றி பெற வைத்த நசிம் ஷா இந்த ஆட்டத்திலும் மனம் தளராமல் தைரியமாக களத்தில் நிற்க, இறுதியில் மூன்று ஓவர்கள் இருக்கும் பொழுது வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனால் பரபரப்பான இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்தத் தொடரும் டிராவில் முடிந்தது. அணியில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் கான் சில காலம் கழித்து அணிக்குள் இந்த தொடரில் தான் மீண்டும் வந்தார். மீண்டும் வந்தவர் 3 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் மிகப்பெரிய மறுவருகையை காட்டி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறார்!