இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் இளம் அதிரடி பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்துவதற்காக நியூசிலாந்து அணி பிரத்யேக திட்டங்களை வகுத்துள்ளதாக அந்த அணியின் ஃபாஸ்ட் பௌலர் ஜேக்கப் டஃபி தெரிவித்துள்ளார்.
இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது சிறந்த பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும், சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா கூட்டணியையே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பிற்கு தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்த நியூசிலாந்து தொடர் மற்றொரு பெரிய வெளிநாட்டு சவாலாக இருக்கும். ஜூலை மாதம் அறிமுகமானதில் இருந்து இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய நியூசிலாந்து பௌலர் ஜேக்கப் டஃபி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை நேரில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஜேக்கப் டஃபி பேசும்போது “அவர் ஒரு நம்பமுடியாத திறமைசாலி. மிகக் கடினமாக பந்தை ஹிட் செய்வதுடன், அதைத் தொடர்ந்து தவறாமல் செய்கிறார் என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். ஒவ்வொரு போட்டியிலும் 250 ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவிக்கும் அவர், வாய்ப்புகளைத் தவறவிடுவதே இல்லை. அதுவே மிகச் சிறந்த விஷயம். இங்குள்ள கண்டிஷன்ஸ் அவருக்குக் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், அது நிச்சயமாக அவருக்கு ஒரு சவாலாக இருக்கும். நாங்கள் அவரைப் பற்றி ஒரு நல்ல ஸ்கவுட்டிங் செஷன் நடத்தி ஆராய்ந்து வைத்துள்ளோம், அவருக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்ற திட்டங்களையும் தயாராக வைத்துள்ளோம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் குறித்து பேசும்போது “அவர் உலகின் மிக வேகமான பௌலர் இல்லைதான். ஆனால் அவர் மிகுந்த ஸ்கில் நிறைந்தவர். பந்தை ஸ்விங் செய்கிறார், உடனடியாக சரியான லென்தை பிடிக்கிறார், பேட்டர்களை நன்றாக கணிக்கிறார். வேரியேஷன்ஸ் செய்யும் திறமையும் அவரிடம் உள்ளது. எனவே அவரது அணியின் தரப்பில் இருந்து அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் கூலாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.






