இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவோம் என நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றி விட்டது.
WTC பைனலுக்கு நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு
நியூசிலாந்து அணிக்கு தற்பொழுது இந்தியா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளையும் நியூசிலாந்து அணி வெல்லும் பட்சத்தில் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறும்.
எனவே நியூசிலாந்து அணி அடுத்து தங்களுக்கு இருக்கும் எல்லா டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இதே போன்ற நிலையில் இருந்து தகுதி பெற்றதோடு இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பையும் கைப்பற்றி இருந்தது.
நியூசிலாந்து பயிற்சியாளர் சவால்
இதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறும் பொழுது ” முதல் முறையாக நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற நான்கு டெஸ்ட் போட்டிகளில் நான்கையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அப்பொழுது நாங்கள் அதைச் செய்து இறுதிப் போட்டிக்கு தகுதியும் பெற்றோம். நாங்கள் ஏற்கனவே இதை செய்திருக்கிறோம். எனவே இன்னொரு முறை எங்களால் செய்ய முடியும் என்று நம்புகிறோம்”
இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. டாப் 10ல் வெளியேறிய 3 இந்திய பேட்ஸ்மேன்கள்.. கில்லி ஜெய்ஸ்வால்.. பும்ரா அஸ்வினும் கீழே இறக்கம்
“இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி நம்ப முடியாத ஒன்று. ஆனால் எங்களின் நோக்கம் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்குவதுதான். சிவப்பு களிமண் ஆடுகளத்தில் விளையாடுவது முற்றிலும் வேறு வகையான சவாலானது. அதே சமயத்தில் மிக வேகமாக இதற்கு தகுந்தார் போல் நாங்கள் மாற்றி அமைத்துக் கொள்வோம். அடுத்த போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிகவும் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.






