நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அந்த அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் இந்திய அணி அதை 10 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேசியிருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று இருந்தது. இந்த நிலையில் நேற்று மூன்றாவது போட்டியையும் வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி விட்டது. டி20 உலகக் கோப்பைக்கு செல்ல நியூசிலாந்து அணி அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று நம்பிக்கையை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
ஜெயிக்க முடியாதுனு தெரியும்
கடந்த தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணிக்கு ஓரளவுக்கு சவால்கள் காணப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி ஒரு டி20 போட்டியை வெல்லவும் செய்தது. ஆனால் நியூசிலாந்து அணியால் எந்த சவாலையும் இந்திய அணிக்கு தற்போது கொடுக்க முடியவில்லை.
இதுகுறித்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேசும்போது “முதலில் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு நாம் பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். அவர்கள் எங்களுடைய ஆட்டத்தை மிகவும் கடினமானதாக மாற்றினார்கள். பவர் ப்ளேவில் விக்கெட்டை இழப்பது முக்கியமான விஷயம். அங்கிருந்துதான் நாங்கள் 150 ரன்கள் எட்டினோம். ஆனால் இதை வைத்து வெற்றி பெறுவது கடினம் என்று எங்களுக்கு தெரியும்”
தவற விட்டு விட்டோம்
“இங்கு ரன் குவிப்புக்கு சாதகம் இருந்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகத்தான் இருந்தது மேலும் வேகமான அவுட்ஃபீல்ட் இருந்தது. இத்துடன் மைதானமும் சிறியதாகவே இருந்தது. ஆனால் நாங்கள் இதை பயன்படுத்தி பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. காரணம் இந்திய பவுலர்கள் சிறப்பாகப் பந்து வீசினார்கள். பவர் பிளேவில் மூன்று விக்கெட்டை இழந்த பிறகு பெரிய ஸ்கோர் அடிப்பது கடினம். இதற்கான பாராட்டு அவர்களுக்கு சென்று சேரும்”
இதையும் படிங்க : ரெண்டு பேர் என்ன பண்றாங்கன்னு கண்காணிச்சு கிட்டு இருந்தேன்.. இப்ப புது வேலை கொடுத்திருக்காங்க – பும்ரா பேச்சு
“நாங்கள் வீரர்களுக்கு சில பொறுப்புகளை கொடுத்து அதை செய்ய சொல்லி இருக்கிறோம். இந்த தொடர் எங்களுக்கு கற்றுக் கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதே சமயத்தில் எங்கள் முதல் போட்டியை டி20 உலகக் கோப்பையில் சென்னையில் வைத்து விளையாடுகிறோம். அங்கு நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று தெரியும்” எனக் கூறி இருக்கிறார்.






