இந்திய டி20 இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் பலவீனத்தை தங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என நியூசிலாந்து பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் தெரிவித்திருக்கிறார்.
இரு அணிக்கும் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அபிஷேக் ஷர்மா இரண்டு அதிரடியான அரை சதங்களை அடித்து, ஒட்டுமொத்த நியூசிலாந்து அணி நிர்வாகத்தையும் அசர அடித்திருக்கிறார். அவருக்கு எதிராக திட்டத்தை கொண்டு வர முடியாமல் அவர்கள் தடுமாறி வருகிறார்கள்.
அபிஷேக் ஷர்மாவை பொறுத்தவரையில் அவர் முதல் பந்தில் இருந்து தாக்குதல் பாணியில் ஆட ஆரம்பிக்கிறார். அது அவர் ஆட்டம் இழக்கும் வரையில் தொடர்கிறது. அதே சமயத்தில் அவர் ஒவ்வொரு பந்தையும் சரியாகப் பார்த்து டைமிங் செய்து விளையாடுகிறார். கண்டபடி சுற்றுவது கிடையாது. இதன் காரணமாக அவரது பலவீனம் என்று எதையும் கண்டுபிடிக்க முடிவதில்லை.
இது குறித்து ஜேக்கப் ஓரம் கூறும் பொழுது “நீங்கள் அபிஷேக் ஷர்மாவின் ஸ்ட்ரைக் ரேட்டை பார்க்கும் பொழுது அவருக்கு ஏதாவது பலவீனம் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கிறது. அவருக்கு எதிராக ஒரு திட்டத்தை சரியாக செயல்படுத்துவதும் கடினம். கிரிக்கெட்டில் பந்துவீச்சு பேட்டிங் எதுவாக இருந்தாலும் திட்டத்தை செயல்படுத்துவது தான் மிகவும் கடினமானது”
“அதே நேரத்தில் மைதானத்தில் எல்லா பக்கத்திலும் பந்து பறக்கும் பொழுது, குழப்பமான சூழ்நிலை நிலவும் பொழுது, அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் இருந்து, திட்டங்களை நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை சரியாக செயல்படுத்த, உண்மையிலேயே பெரிய மனநிலை தேவைப்படுகிறது. ஆனால் இதுவும் கற்றுக் கொள்வதின் ஒரு பகுதிதான்”
இதையும் படிங்க : சாம்சனுக்கு அந்த விஷயம் அசிங்கமா இருக்கும்.. ஆனா அவர் இதை மட்டும் நினைச்சு பார்த்தா கலக்கலாம் – ரகானே அறிவுரை
“இந்த தொடர் முழுவதும் நாங்கள் கற்றுக் கொள்வதாகத்தான் இருந்தது. இந்த அனுபவத்தால் நாங்கள் சிறந்த அணியாக மாறி சூப்பர் 8 மற்றும் அரையிறுதிக்கு டி20 உலகக் கோப்பைக்கு வந்தால் அது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். அப்படி நாங்கள் வரும்பொழுது இதிலிருந்து சிறப்பான விஷயங்களை கற்றுக் கொண்டிருப்போம்” என்று கூறி இருக்கிறார்.