இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைதானத்தின் தன்மை எப்படி இருந்தாலும் தனது மன உறுதியைத் தளரவிடாமல் பந்துவீசுவது குறித்து இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் ப்ரார் பேசியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த குர்னூர் ப்ரார், பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத சூழலிலும் பேட்டர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
துணைக்கண்டத்து மெதுவான பிட்சுகளில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவது ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு அதிக நம்பிக்கையைத் தரும். இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் இணைந்து பயணித்தது தனக்கு பெரிய அனுபவத்தைக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குர்னூர் ப்ரார் பேசும்போது “முதலில் நாம் நம்முடைய மைண்ட்செட்டை பலமாக உருவாக்க வேண்டும். விக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை என்று நினைக்கத் தொடங்கினால், நீங்கள் ஏற்கனவே பேட்டரை விட ஒரு ஸ்டெப் பின் தங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால் நான் அதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நான் பந்துவீசும்போது எதிர்முனையில் இருக்கும் பேட்டர் நாம் ஆட்டத்தில் இல்லை என்ற உணர்வை பெற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து மூத்த வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொண்டது பற்றி பேசும்போது “இந்திய அணியில் ரஞ்சி டிராபி மற்றும் இந்தியா ஏ போட்டிகளின் பெர்ஃபார்மன்ஸ் மூலமாகவே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மூத்த வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தபோது, எந்த பிட்சில் எப்படி ஒரே லென்த்தில் கன்சிஸ்டன்ட்டாக பந்துவீசுவது என்பதைக் கற்றுக் கொண்டேன். பும்ரா பாய், சிராஜ் பாய் ஆகியோரை அருகில் இருந்து பார்த்ததே எனக்கு பெரிய எக்ஸ்பீரியன்ஸ்” என்று கூறி இருக்கிறார்.