இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முடித்தவுடன் தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் லூக் ரோஞ்சி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சத் திட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 259 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணிக்கு 16 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து இருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஒரு கட்டத்தில் 197 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த நியூஸிலாந்து அணி 259 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் லூக் ரோஞ்சி நியூசிலாந்து அணி பந்து வீசும் போது இந்திய அணியின் திட்டத்தை பின்பற்ற போவதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
எங்களது திட்டம் இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நீங்கள் ஒரு விஷயத்தை கவனத்தீர்கள் என்றால் இந்திய வீரர்கள் முதல் இரண்டு செஷன்களில் மிக வேகமாக பந்து வீசி தொடங்கினர். அவர்களது ஸ்பெல்லின் முடிவில் தங்களது வேகத்தை குறைத்து பந்து வீச தொடங்கினர். அப்போதுதான் அவர்களுக்கு உண்மையில் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. வாஷிங்டன் சுந்தர் உண்மையில் சிறப்பாக பந்து வீசினார். நீண்ட நேரத்திற்கு அவரால் சரியான பகுதிகளை கணித்து வீச முடிந்தது.
இதையும் படிங்க:அவுட்டாகி 30 நிமிடம் கழித்து.. 91 ரன்னில் இருந்து 89க்கு குறைப்பு.. காரணம் என்ன.?. பாக் இங்கிலாந்து டெஸ்டில் அரிய நிகழ்வு
அவர் கிரீசின் அகலத்திலிருந்து பந்து வீசினார். அது நேராக ஆப் ஸ்டம்பை தாக்கியது. இது எந்த ஒரு பந்து வீச்சாளருக்கும் அற்புதமான பந்து ஆகும். இந்த ஆடுகளம் இதுவரை இல்லாததை விட அதிகமாக மாறும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் நாளை நாங்கள் பந்துவீச்சு வியூகத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நாங்கள் நல்ல பகுதிகளிலும் ஆடுகளத்தின் தன்மையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் எனவே எங்களது திட்டம் இதுதான்” என்று கூறி இருக்கிறார்.






