பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 91 ரன்களில் ஆட்டம் இழந்த போது திடீரென அவரது ஸ்கோர் 89 ரன்கள் குறிக்கப்பட்ட வினோத நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
பாகிஸ்தான் இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 68.2 ஓவர்களுக்கு 267 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் 56 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணிக்கு மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் சிறப்பாக நிலைத்து நின்று விளையாடி இங்கிலாந்து அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தினார். 119 பந்துகளில் 5 பௌண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 91 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.
இரண்டு ரன்கள் குறைக்கப்பட்ட வினோத நிகழ்வு
91 ரன்கள் குவித்து விட்டு ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். சரியாக 30 நிமிடங்கள் கழித்து திடீரென ஸ்மித்தின் ரன்கள் 2 ரன்கள் குறைக்கப்பட்டு 89 ரன்கள் ஆக மாற்றப்பட்டது. ஏனென்றால் ஆட்டத்தின் 59வது ஓவரை சஜித் கான் வீசும் போது அவரது பந்தை தூக்கி அடித்த ஸ்மித் எல்லைக் கோட்டிற்கு வெளியே விழுந்ததாக தவறாக குறிக்கப்பட்டு ஆறு ரன்களாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு டிவி ரிப்ளையில் தெளிவாக பார்த்த பிறகு எல்லை கயிற்றுக்கு முன் பந்து பட்டு பவுண்டரி லைனை தாண்டியது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:59 ரன்ஸ்.. 4 நாளில் டி20 சாம்பியன் நியூஸி தோல்வி.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. முதல் ODI கிரிக்கெட்
இதனால் அந்த ஆறு ரன்கள் 4 ரன்களாக குறைக்கப்பட்டு 91 ரன்கள் 89 ரன்கள் ஆக மாற்றப்பட்டது. இதில் பாகிஸ்தான் அணியில் சஜித் கான் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தற்போது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் நான்கு நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்தப் போட்டியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.






