தற்போது அமெரிக்காவில் எம்எல்சி டி20 லீக் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இன்று குறிப்பிட்ட ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலையில் வாழ்வா சாவா போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோதியது. இதில் கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டு முதலில் பந்து வீசுவது என அறிவித்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜேசன் ராய் 23 பந்தில் 27 ரன், கேப்டன் சுனில் நரைன் 4 பந்தில் 6 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து வந்த உன்முக்த் சந்த் மற்றும் டேவிட் மில்லர் என பிரபல வீரர்கள் ஏமாற்றினார்கள். கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டக்காரர் ஆன்ட்ரே ரசல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவரில் லாஸ் ஏஞ்சல் நைட் ரைடர்ஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ரஷீத் கான் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை வேகமாக ஏற்றினால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு டிவால்ட் பிரிவியஸ் 19 பந்தில் 27 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 28 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.இதற்கு அடுத்து தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி நெருக்கடியில் சிக்கியது.
இதற்கு அடுத்து பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் வந்த கேப்டன் கீரன் பொல்லார்டு அதிரடியாக 12 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 33 ரன்கள் குவித்து, மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை 17 ஓவரில் இலக்கை எட்டவைத்து நான்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க : கம்பீர் அகர்கர் பிரஸ் மீட்.. வெளியிடப்பட்ட முக்கிய 7 விஷயங்கள்.. இந்திய கிரிக்கெட் இனி இப்படித்தான் இருக்கும்
இந்த அதிரடியான வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் ப்ளே ஆப் சுற்றில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோத இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணி உரிமையாளர்களின் அணிகள் அமெரிக்க டி20 லீக்கில் பிளே ஆப் சுற்றில் மோதுவது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது!