புதிய விதியை பயன்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை தூக்கிய டெல்லி; எப்படி சாத்தியமானது?!

0
2730
WPL

இந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்களுக்கு ஐபிஎல் தொடர் நடத்தி வருவதைப் போலவே பெண்களுக்கும் ஐபிஎல் தொடரை நடத்துகிறது!

மும்பை டெல்லி பெங்களூரு உத்தரப்பிரதேசம் குஜராத் ஆகிய ஐந்து இடங்களை மையமாகக் கொண்டு 5 அணிகள் உருவாக்கப்பட்டு, மும்பையை சுற்றி உள்ள மைதானங்களில் மொத்த தொடரும் நடைபெற இருக்கிறது!

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று மும்பை குஜராத் அணிகளுக்கு இடையே துவங்கியது. இந்த போட்டியில் மும்பை அணி குஜராத் அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது!

இதற்கு அடுத்து இன்று ஞாயிறு விடுமுறை நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் என்பதால் முதல் போட்டியில் பகலில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதின!

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா மற்றும் மெக் லானிங் இருவரது அதிரடி அரை சதங்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 223 ரன்களை இரண்டு விக்கெட் இழப்பிற்கு குவித்தது!

- Advertisement -

இதற்குப் பிறகு களமிறங்கிய பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முழுமையாக பேட் செய்தும் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சு வீராங்கனை டாரா நோரிஸ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து பெரி, கசாட், ரிச்சா கோஸ், ஹீதர் நைட், அகுஜா ஆகிய ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரை ஆட்டநாயகியாகவும் அறிவிக்கப்பட்டார்!

இந்தப் போட்டியில் டெல்லி அணி ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகளுடன் களத்தில் இறங்கியது. ஐபிஎல் விதிப்படி நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களத்தில் இறங்க முடியும். ஆனால் பெண்கள் ஐபிஎல் தொடரில் நான்கு வெளிநாட்டு வீராங்கனைகளுடன் ஒரு அசோசியேட் வெளிநாட்டு வீராங்கனையும் அணியில் இடம் பெறலாம். அதாவது பெரிய போட்டிகளில் பங்கேற்காத ஐசிசி அங்கீகாரம் பெறாத நாட்டை சேர்ந்த ஒருவர் இடம் பெறலாம். இந்த விதியின் படி அமெரிக்காவை சேர்ந்த டாரா நோரிசை களம் இறக்கி ஐந்து விக்கட்டுகளையும் அடித்து டெல்லி அணி புத்திசாலித்தனமாக ஆட்டத்தை வென்றது!

இதுவரை நடந்துள்ள மூன்று ஆட்டங்களில் இந்த விதியை யாரும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை மேலும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளை ஏலத்தில் மற்ற அணிகள் எடுத்திருக்கிறதா என்பது குறித்தும் வெளியில் தெரியவில்லை!