கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார்கள். இதில் மூன்று ஃபார்மேட் கிரிக்கெட்டுக்கும் மூன்று வித்தியாசமான இந்திய அணி அமைக்கப்படுமா? என்பது குறித்தான முக்கிய கேள்வி கம்பீரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் நேரடியாகவே பதில் அளித்திருக்கிறார்.
தற்போது மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்றபடி ஒவ்வொரு வடிவத்திற்கும் சரியான வீரர்களை கொண்டு வந்து, அவர்களை வைத்து மூன்று அணிகளை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். குறைந்தபட்சம் இந்திய கிரிக்கெட்டில் டி20 வடிவத்திற்காவது தனிப்பட்ட ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது.
உலக கிரிக்கெட்டில் முதல்முறையாக இங்கிலாந்து மூன்று வடிவத்திற்கும் தனி அணிகளை அமைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்தது. அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றது. தற்போது சூரியகுமார் யாதவ் மட்டுமே டி20 கிரிக்கெட் ஸ்பெசலிஸ்ட் பிளேயராக இருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்து கம்பீரிடம் கேட்கப்பட்ட பொழுது ” இறுதியில் இப்படியான விஷயங்கள் எல்லாம் நடக்கின்றன. ஆனால் இப்பொழுது இது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அதே சமயத்தில் தற்பொழுது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால், இப்போதைக்கு இந்திய டி20 கிரிக்கெட்டில் நாம் மாற்றங்களை சந்திப்போம்.
50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் இரண்டிலும் நாம் எவ்வளவு சீராக விளையாடுகிறோமோ அவ்வளவு நன்றாக இருப்போம். எனவே இந்த இரண்டு வடிவங்களிலும் வீரர்கள் சேர்ந்தார் போல் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது. இப்படிப்பட்ட வீரர்கள் இருப்பது அணிக்கு மிகவும் நல்லது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 5 கிரிக்கெட் வாரியங்கள் இந்தியா பக்கம் இருக்கு.. எங்களுக்கு லாலிபாப் கொடுத்திருக்காங்க – பாகிஸ்தான் பஷீத் அலி கருத்து
கம்பீர் கருத்தை ஆதரித்து பேசிய அகர்கர் கூறும் பொழுது ” நீங்கள் எந்த வடிவ கிரிக்கெட்டில் விளையாடினாலும் ஒரு சமநிலையான அணியை உருவாக்க அதற்கு சரியான வீரர்களை வைக்க வேண்டும். அவர்கள் ஒரு வடிவத்தில் விளையாடக் கூடியவர்களாகவோ அல்லது இரண்டு வடிவத்தில் விளையாடக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இங்கு எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யப்படுவதில்லை. எந்த வடிவத்திற்கும் சிறந்த 15 பேர் கொண்ட அணியை உருவாக்குவதுதான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.