இன்று டி20 உலக கோப்பையின் இரண்டாவது நாளில் நேபாள் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக வெற்றிக்கு போராடி இறுதியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோஹித் பர்டேல் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய நேபாள் அணி கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நாங்கள் 100% கொடுத்தோம்
இந்த போட்டி பற்றி நேபாள் கேப்டன் பேசும் பொழுது “இந்த போட்டியை முடிவின் அடிப்படையில் பார்த்தால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம். ஆனால் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என எல்லா பக்கத்திலும் 100% கொடுத்தோம். கடைசி கட்ட ஓவர்களில் இங்கிலாந்து அணியும் சிரமப்பட்டது. நாங்களும் கடைசி கட்ட ஓவர்கள் வீசுவதில் இன்னும் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும்”
“நாங்கள் கடைசி ஐந்து ஓவர்களை எப்படி விளையாட வேண்டும் என்று ஏற்கனவே கணக்கிட்டோம். கடைசியில் ஒரு ஓவருக்கு 10 அல்லது 12 ரன்கள் எடுக்கும்படி பார்த்துக் கொள்ள திட்டமிட்டோம். நாங்கள் அதை நோக்கியே தொடர்ந்து விளையாடினோம்”
எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
“நாங்கள் ஆதில் ரசீத்தை தாக்கி விளையாட வேண்டும் என தனிப்பட்ட திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. அது விளையாட்டின் போக்கில் நடந்தது. மேலும் எந்த ஒரு அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல் எங்களையும் யாரும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் சும்மா விளையாடிவிட்டு போக வரவில்லை”
இதையும் படிங்க: வெறும் 4 ரன்.. இங்கிலாந்தை அலறவிட்ட நேபாள் அணி.. கடைசி ஓவர் வரை பரபரப்பு.. தப்பித்த முன்னாள் சாம்பியன்
“எங்களுடைய ரசிகர்கள் மிகவும் ஆர்வம் உடையவர்கள். அவர்கள் எங்கள் நாட்டில் இருந்து பெரிய திரளாக எங்களை ஆதரிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நாங்கள் தாங்கிக் சென்றோம். எங்கள் செயல்பாட்டால் எங்கள் நாடு பெருமை அடைந்து இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






