நடப்பு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்ற பொழுது ஹைதராபாத் அணிக்கு பாட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அவருக்கு அந்த அணியில் இடமே இல்லை என்று பலரும் விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் அந்த அணி அவருடைய தலைமையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் வெற்றி பெற்ற அணியின் பேட்ஸ்மேன்கள் மீது நவ்ஜோத் சிங் சித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணியின் பலம் பேட்டிங்தான் என்பதை உணர்ந்து அவர்கள் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் மீது கவனம் செலுத்தி விளையாடுகிறார்கள்.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொறுத்த வரையில் அவர்கள் இருக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து ஓரளவுக்கு போராடி சமாளிக்கிறார்கள். மற்றபடி அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் எடுத்துக் கொடுக்கும் அதிகப்படியான ரன்கள்தான் அவர்களை வெல்ல வைத்துக் கொண்டு வருகிறது.
இப்படியான நிலையில் நேற்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், டிராவிஸ் ஹெட், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஷார்ட் தேர்ட் மேன் திசையில் வரிசையாக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ” ஒரே பகுதியில் பந்தையடித்து நான்கு பேர் ஆட்டம் இழந்தார்கள். இது முதல் முறை நடந்தால் ஏற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து நடந்தால் இப்படி பந்தையடிப்பவர்கள் முட்டாள்கள். பீல்ட்டுக்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும். அவர்கள் தொடர்ந்து கிரிசில் நின்று விளையாட ஆர்வம் காட்டவில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சாம்சனை இந்திய டீம்ல எடுக்காததற்கு காரணமே இதுதான்.. அவருக்கு பொறுப்பே கிடையாது – கவாஸ்கர் விமர்சனம்
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்களில் 99 ரன்கள் சேர்த்தது. பவர் பிளேவிலும் 60 ரன்கள் தாண்டி எடுத்தது. பேட்டிங்கின் முதல் பகுதியில் அந்த அணி எடுத்த ரன்கள்தான் நேற்று அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.