நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டி இருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை வான்கடே மைதானத்தில் ஆர்சிபி அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்திருக்கிறது. இதே அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்திருந்தது. தற்போது ஆர்சிபி அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார்.
ரஜத் பட்டிதார் காட்டிய பெருந்தன்மை
நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடிய 64 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டம் இழந்த போதும் கூட அவர் தனது அதிரடியை நிறுத்திக் கொள்ளவில்லை. ரன் குவிக்கும் வேகத்தை மேலும் அதிகரித்து ஆர்சிபி அணி 220 ரன்கள் தாண்டுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்ட பொழுது, இந்த விருதுக்கு எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் தகுதியானவர்கள் என்றும், பந்து வீசுவதற்கு கடினமான ஆடுகளத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றும், தன் அணியின் பந்துவீச்சாளர்களை பெருமைப்படுத்தி கேப்டனாக பேசி அசத்தியிருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் அவருடைய கேப்டன்சி மெருகேறிக்கொண்டே வருகிறது.
இம்ரான் கான் தோனி போன்றவர்
இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது ” ஒரு மனிதன் அமைதியாக இருக்கும் பொழுது சரியான முடிவுகளை எடுப்பார். நேற்று விக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருந்த காரணத்தினால், ஆர்சிபி அணியின் கேப்டன் தங்கள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கிரெடிட் கொடுத்தார். அவர் இம்ரான் கான், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போல அணியை முன்னின்று வழி நடத்தினார். தேவைப்படும்போது அவர் தனது வீரர்களை ஆதரித்தார். அவர்கள் சிறப்பாக செயல்பட்ட போது அவர்களுக்கு கிரெடிட் கொடுத்தார்”
இதையும் படிங்க : SRH ரெட் லைட்டை மதிக்காம போனாங்க.. பவுலர்ஸ் இந்த பிளான்ல மடக்கி பிடிச்சிட்டாங்க – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
“தோனி உலகக் கோப்பையை வென்ற பொழுது அதை தனது அணி வீரர்களிடம் கொடுத்ததை பார்த்தோம். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கோப்பையை வென்ற பொழுது அதையே செய்ததை பார்த்தோம். ரஜத் பட்டிதாருக்கு தோல்வி பயமே கிடையாது. அவர் பேட்டிங் இன்னிங்ஸ் கூட சிறப்பானது. விராட் கோலி ஆட்டம் இழந்த பிறகு அவர் எந்த இடத்திலும் பயப்படவில்லை. தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்” என்று பாராட்டி இருக்கிறார்.






