” மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேதன் லியான் புதிய சாதனை”- வார்னே மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோரின் சாதனையை முறியடித்தார்!

0
94

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநில தலைநகரான இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று துவங்கியது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

முதல் ஆறு ஓவர்களுக்கு ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி அதன் பிறகு விக்கெட்களை வேகமாக இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலி அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் குக்னேமன் ஐந்து விக்கெட்டுகளையும் நேத்தன் லியான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டாட் மர்பி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆசிய நாடுகளில் அதிக விக்கெட் களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் நேதன் லியான். இதன் மூலம் தனது சக நாட்டு வீரரான மறைந்த சுழல் பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்து முதலிடத்திற்குச் சென்று இருக்கிறார் லியான்.

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் வார்னே ஆசிய நாடுகளில் 127 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதனையாக இருந்தது. இந்திய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் லியான். ரவீந்திர ஜடேஜாவை எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆக்கியதன் மூலம் ஆசிய நாடுகளில் 129 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

ஆசிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக விக்கெட்களை வீழ்த்திய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் தற்போது நேதன் லியான் 129 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். வார்னே 127 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி 98 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் 92 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்திலும் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 82 விக்கெட்களுடன் ஐந்தாம் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வால்ஸ் 77 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

தேநீர் இடைவேளைக்குப் பின்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 104 ரன்கள் ஒரு விக்கெட் மட்டுமே இழந்துள்ளது. இதன் மூலம் ஐந்து ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் இருக்கிறது. உஸ்மான் கவாஜா 51 ரன்கள்டனும் மார்னஸ் லபுசேன் 30 ரன்கள்டனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.