WPL 2025 புள்ளி பட்டியல்: யூபி எதிரான வெற்றி முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ்.. ஆர்சிபி அணிக்கு பின்னடைவு

0
283

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 11வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் கிரண் – கிரேஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் நடாலி ஸிவர்பிரண்ட் முதல் ஓவரை வீசினார். 

இந்த ஓவரின் 4வது பந்திலேயே கிரண் 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் கிரேஸ் ஹாரிஸ் – விருந்தா தினேஷ் கூட்டணி இணைந்தது. இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க, 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 26 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். பின்னர் விருந்தாவும் 33 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

சொதப்பிய யுபி வாரியர்ஸ்

இதனால் 10.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து வந்த கேப்டன் தீப்தி சர்மா 4 ரன்களிலும், தஹிலா மெக்ராத் 1 ரன்னிலும், ஸ்வேதா ஷெராவத் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீராங்கனைகளில் யாரும் சோபிக்காததால், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை சேர்த்தனர். 

மும்பை அணி தரப்பில் நடாலி ஸிவர்பிரண்ட் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஷப்னம் மற்றும் சன்ஸ்கிருதி குப்தா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி ஹேலி மேத்யூஸ் – யஷ்டிகா பாட்டியா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் யஷ்டிகா டக் அவுட்டாகி வெளியேற, ஹேலி மேத்யூஸ் – நடாலி கூட்டணி இணைந்து அதிரடியில் வெளுத்து கட்டியது.

- Advertisement -

வெளுத்து கட்டிய நடாலி

ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும் சிக்சருமாய் வெளுத்து கட்ட, 2வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய ஹேலி மேத்யூஸ் 50 பந்துகளில் 59 ரன்களை எடுத்து வெளியேறினர். இறுதியாக மும்பை அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த நடாலி 44 பந்துகளில் 13 பவுண்டரிகள் உட்பட 75 ரன்களை குவித்தார். 

இந்த வெற்றியின் காரணமாக புள்ளிப்பட்டியலில்  மும்பை அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 2வது இடத்தில் டெல்லி அணியும், 3வது இடத்திற்கு ஆர்சிபி அணியும் தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் 2 வாரங்கள் ஆட்டம் நடக்கவுள்ளதால், சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று கணிக்கப்படுகிறது. 

- Advertisement -