மும்பை டீம் என்னை சின்ன பையன் மாதிரி ட்ரீட் பண்ணவே இல்லை, இது தான் எனக்கு தைரியம் கொடுக்குது – இளம் அதிரடி வீரர் திலக் வர்மா பேட்டி!

0
664

மும்பை இந்தியன்ஸ் அணியில் என்னை ஜூனியர் வீரராக பார்ப்பதில்லை. முழு பொறுப்பையும் சுதந்திரத்தையும் கொடுக்கிறார்கள். அதனால் தான் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்று பேசியுள்ளார் திலக் வர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணியில இந்த சீசனில் பேசுபொருளாக இருந்து வருபவர் 20 வயதான இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா. இந்த சீசனில் இதுவரை 5 லீக் போட்டிகள் விளையாடி 214 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக ரன்கள் குவித்தவராக இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து சொதப்பியபோது, கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார் திலக் வருமா.

சிஎஸ்கே அணிக்கு எதிராக 18 பந்துகளில் 22 ரன்கள், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 41 ரன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 25 பந்துகளில் 30 ரன்கள், நடந்து முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 37 ரன்கள் என கிட்டத்தட்ட 54 ரன்கள் சராசரி மற்றும் 159 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.

20 வயதே ஆகும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாது, இந்திய அணிக்கும் சிறந்த எதிர்கால வீரராக இருப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னை எப்படி நடத்துகிறார்கள்? இவ்வளவு முதிர்ச்சியான ஆட்டத்தை 20 வயதில் எவ்வாறு வெளிப்படுத்த முடிகிறது? ஆகியவை பற்றி சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் திலக் வர்மா.

- Advertisement -

“கடந்த சீசன் மும்பை அணிக்கு வந்தபோது, இவ்வளவு பெரிய பாரம்பரியமிக்க அணிக்காக விளையாட போகிறோம் என்கிற பதட்டமும் பயமும் என்னிடம் இருந்தது. ஆனாலும் அணியினர் எனக்கு கொடுத்த நம்பிக்கை மற்றும் பக்கபலம் என்னை தொடர்ந்து செயல்பட வைத்தது. அதன் வெளிப்பாடாகவே கடந்த சீசனில் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக பாராட்டுக்களும் கிடைத்தன.

இந்த சீசனில் ஆரம்பம் முதலே நான் இளம் வீரர் இல்லை என்றவாறு அணியினர் என்னை உணர வைத்திருக்கிறார்கள். அணியில் சீனியர் வீரர் போலவே என்னை நடத்துகிறார்கள். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உன்னுடைய ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்து என்பதைக் கூறி பக்கபலமாகவும் இருக்கிறார்கள்.

மேலும் அணியில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால் எந்தவித கவலையும் இல்லை. எப்போது என்ன கேட்டாலும் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த சீசன் முழுவதும் எனக்கென்று தனி ரோல் கிடையாது. களமிறங்கி பேட்டிங்கில் எனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அது மட்டுமே எனக்கு கொடுக்கப்பட்ட ரோல்.” என்று பேசினார்.