நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியின் தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சில முக்கிய விஷயங்களைப் பார்த்திருக்கிறார்.
மழை பெய்த காரணத்தால் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டம் 11 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, பேட்டிங் செய்ய களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்சி மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி மும்பை இந்தியன்ஸ் பௌலிங்கை பாரபட்சம் பார்க்காமல் அடித்து நொறுக்கியது. 4.6 ஓவரில் 80 ரன்கள் குவித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டை பறி கொடுக்க அதற்குப் பின்னர் நிலைத்து நின்று விளையாடிய ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதனால் 11 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணியில் தொடக்க ஜோடி விரைவாக ஆட்டம் இழக்க, மிடில் வரிசை ஆட்டக்காரர் நமன் திர் மட்டும் 13 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டும் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும் போது “பவர் பிளேவில் நாங்கள் நன்றாக பவுலிங் போடவில்லை என்றும், அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள் என்றும் நினைக்கிறேன். எங்கள் பந்து வீச்சாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஒரு பவுலிங் குழுவாக நாங்கள் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. அவர்களின் பேட்டிங் அபாரமானதாக இருந்தது. எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை என்று கூற முடியாது. இதற்கு பவுலிங் துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
இது t20 கிரிக்கெட். இதில் எப்போதும் இரண்டு சரியான பந்துகளை வீசுவது தான் முக்கியம். நாங்கள் சரியான ஐந்து பந்துகளை வீசி இருந்தால் இந்த ஆட்டத்தில் நாங்கள் இருந்திருப்போம். ஒரு 16 வயது சிறுவன் இந்த போட்டியை விளையாடும் விதம் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது. அவர் பேட்டிங் செய்யும் விதம், அவரிடம் இருக்கும் இந்த துணிச்சல் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது. இந்தப் போட்டிக்கு நாங்கள் தயாராகும் காலகட்டத்தில் அவரைப் பற்றி விவாதித்தோம் என்பதையும் நினைவு கூற வேண்டும். எதிர்காலத்தில் அவர் சிறந்து விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பேசி இருக்கிறார்.






