நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் மும்பை அணி தோல்வி அடைந்த விதம் குறித்து அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
மும்பை அணி தோல்வி
மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மும்பை அணியில் மூன்றாவது வரிசை வீரர் வில் ஜாக்ஸ் 35 பந்துகளை எதிர் கொண்டு ஐந்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 53 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக சூரியகுமார் யாதவ் 24 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. இரண்டாவது பாதியில் பெய்த மழையின் காரணமாக 19 ஓவர்களில் 147 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஒரு பகுதி வரை மும்பை கையில் இருந்த ஆட்டம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் 8வது ஓவரில் 2 நோ பால்கள் வீச, ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குஜராத் அணியின் பக்கம் திரும்ப கடைசி ஓவரில் தீபக் சஹாரின் மற்றொரு நோ பாலால் குஜராத் அணி வெற்றி பெற்றது.
தோல்விக்கு காரணமே இதுதான்
இந்த சூழ்நிலையில் தோல்வி அடைந்த விதம் குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது “கேட்சுகள் எங்கள் போட்டியை மாற்றியது என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு பகுதி வரை நாங்கள் நல்ல நிலையிலேயே இருந்தோம். நாங்கள் தோல்வியடைந்ததற்கு காரணமாக நோ பால்களை தான் சொல்ல விரும்புகிறேன். நான் வீசிய இரண்டு நோ பால் மற்றும் கடைசி ஓவரில் வந்த ஒரு நோ பால் கூட இதற்கு காரணமாகும். டி20 கிரிக்கெட்டில் இது ஒரு குற்றமாகும். டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான நேரங்களில் இத்தகைய தவறு கூட போட்டியை மாற்றும். இன்றைய போட்டியில் கூட எங்களுக்கு நடந்தது.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் கோலி ஓய்வு எப்போது.? இந்திய கோச் கெளதம் கம்பீரின் வெளிப்படையான பதில்
அதே நேரத்தில் அனைவரும் தங்களால் முடிந்த அளவு போராட்ட குணத்தை வெளிப்படுத்தி விளையாடினோம் அதற்கு நன்றி. நிச்சயமாக நாங்கள் குவித்த ஸ்கோர் கார்டுடன் நாங்கள் நல்ல நிலையிலேயே போராடி வந்தோம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டோம். ஆனால் ஒரு குழுவாக நாங்கள் போராடியதில் மிகவும் மகிழ்ச்சி. இது நிச்சயமாக 150 ரன்கள் எடுக்கக்கூடிய விக்கெட் கிடையாது. இன்னும் நாங்கள் நன்றாக விளையாடியிருந்தால் 20 முதல் 30 ரன்கள் வரை குவித்திருக்கலாம்” என்று பேசி இருக்கிறார்.






