மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025ன் 16வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. லக்னோ அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஸ் 60 ரன்கள் மற்றும் எய்டன் மார்க்ரம் 53 ரன்கள் குவித்தனர். அதற்குப் பின்னர் இறுதிக்கட்டத்தில் பதோனி 30 ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் 27 ரன்கள் குவித்தனர்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேறினாலும் நமன் திர் மற்றும் சூரியகுமார் ஜோடி சிறப்பாக விளையாடி ஓரளவு அணியை மீட்டது. இதில் எதிர்பாராத விதமாக நமன் திர் 46 ரன்னில் வெளியேற, சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்குப் பின்னர் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹட் ஆகி வெளியேற, கேப்டன் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தும் இறுதியில் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா கூறும் போது “நாங்கள் தோற்றது உண்மையில் ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தில் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் விட்டுக் கொடுத்தோம். நான் எப்போதுமே எனது பந்து வீச்சை ரசித்து வீசுகிறேன். இந்த போட்டியில் பெரிய விக்கெட்டுகள் எடுத்தும் அதில் மகிழ்ச்சி இல்லை. நான் ஆடுகளத்தை புரிந்து அதற்கு ஏற்றவாறு பந்துகளை வீச வேண்டும் என்று முயற்சிக்கிறேன். விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் செயல்படுவது இல்லை. ஒரு பேட்டிங் யூனிட் ஆக நாங்கள் போட்டியை தவற விட்டோம். ஒரு அணியாக நாங்கள் தோற்றோம், நான் யாரையும் தோல்விக்கு காரணம் என்று சுட்டிக் காட்ட விரும்பவில்லை.
இதையும் படிங்க:203 ரன் இலக்கு.. 19 வது ஓவரில் வெறும் 7 ரன்.. சம்பவம் செய்த சர்துல் தாகூர்.. சூர்யா போராட்டம் வீண்.. 12 ரன்னில் போராடி மும்பை தோல்வி
முழு பேட்டிங் யூனிட்டும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தோல்விக்கு நான் முழு உரிமையும் எடுத்துக் கொள்கிறேன். திலக் வர்மா ஆட்டத்தின் இறுதியில் வெளியேறியது குறித்து கேட்கிறீர்கள். எங்களுக்கு இறுதியில் பெரிய ஷாட்கள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுபோன்று சில நாட்கள் வரும் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது நடக்காது. நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நான் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறந்த முடிவுகளை எடுங்கள், பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருங்கள் பேட்டிங்கில் வாய்ப்புகளை எடுங்கள். இது ஒரு நீண்ட தொடர் இன்னும் இரண்டு வெற்றிகள் கிடைத்தால் நாங்கள் முன்னேற முடியும்” என்று பாண்டியா கூறியிருக்கிறார்.






