மகளிர் ஐபிஎல் பிரிமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
மகளிர் ஐபிஎல் பிரிமியர் லீக்
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் முதலில் பேட்டிங்கை துவங்கியது. இதன்படி துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 13 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். வியாட் ஹாஜ் 9 ரன்னில் வெளியேற, மூன்றாவது வரிசை வீராங்கனையான எல்லீஸ் பெர்ரி அதிரடியான ஆட்டத்தை மேற்கொண்டார்.
43 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 83 ரன்கள் குவித்து பெங்களூர் அணியின் ரன்கள் உயர்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். அதற்குப் பிறகு விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுக்க, பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் அம்ஜோத் கவுர் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை அணி சிறப்பான வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை யஸ்டிகா பாட்டியா 8 ரன்னில் வெளியேறினாலும், மூன்றாவது வரிசை வீராங்கனை நேட் சிவியர் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீராங்கனை மேத்யூஸ் 15 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, சிக்கலில் இருந்த மும்பை அணியை கேப்டன் ஹெர்மன் பிரீத் கவுர் மற்றும் அம்ஜோத் கவுர் ஆகியோர் சிறப்பாக விளையாடி மும்பை அணியை மீட்டு எடுத்தார்கள்.
இதையும் படிங்க:107 ரன்னில் தென் ஆப்பிரிக்கா மெகா வெற்றி.. ரிக்கல்டன் மற்றும் ரபாடா அசத்தல்.. குர்பாஸ் ஏமாற்றம்.. ஆப்கன் மோசமான தோல்வி
ஹர்மன் பிரீத் 38 பந்துகளில் 50 ரன்கள் வெளியேற, அம்ஜோத் 27 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 34 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு 6 ரன்கள் தேவைப்பட, பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் வைத்து ஐந்தாவது பந்தில் கமாலினி பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.






