நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி மற்றும் இரண்டு போட்டியில் தோல்வி கண்டுள்ளது. நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணி அதற்கு முந்தைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டிருந்தது. அந்த போட்டியில் இருபத்தி எட்டு வயதான இளம் வீரர் ஜித்தேஷ் ஷர்மா முதன்முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கினார்.
முதல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜித்தேஷ் ஷர்மா
இருபத்தி எட்டு வயதான இவர் விதர்பா அணிக்காக விளையாடி வரும் வீரர் ஆவார். இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் இடம்பெற்றிருந்தாலும் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் இருந்தது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இவருக்கு தொடரின் ஆரம்பத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் 17 பந்துகளில் 3 சிக்ஸர் அடித்து மொத்தமாக 26 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி அந்த போட்டியில் மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டையும் மிக சாமர்த்தியமாக கைப்பற்றினார். ராகுல் சஹர் வீசிய பந்து லேசாக மகேந்திர சிங் தோனியின் பேட்டில் உரசி ஜித்தேஷ் ஷர்மாவின் கைகளுக்குச் சென்றது.
மைதானத்தில் இருந்த வீரர்கள் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்த பொழுது, ஜித்தேஷ் ஷர்மா நிச்சயமாக எம்எஸ் தோனி அவுட் என்று தன்னுடைய கேப்டன் மயங்க் அகர்வாலை டிஆர்எஸ் எடுக்க வைத்தார். டிஆர்எஸ் விதிமுறையின்படி மறுஆய்வு செய்து பார்க்கையில் மகேந்திர சிங் தோனியின் பேட்டில் பந்து பட்டது உறுதியானது.பின் மகேந்திர சிங் தோனி அவுட் கொடுக்கப்பட்டார்.
நாளுக்கு நாள் நீ உன்னை மேம்படுத்திக் கொள்வாய்
போட்டி முடிந்த பின்னர் மகேந்திர சிங் தோனி தன்னிடம் ஒரு சில விஷயங்களை பேசியதாக தற்போது ஜித்தேஷ் ஷர்மா கூறியுள்ளார். போட்டியில் என்னுடைய கால் அசைவுகள் மற்றும் கை கிளவுஸ்ஸின் வேகம் சரியாக இருந்தது என்று என்னை பாராட்டினார். மேலும் பேசிய அவர் நாட்கள் செல்லச் செல்ல நீ இன்னும் உன்னை மெருகேற்றி கொள்வாய், உன்னுடைய ஆட்டம் நாளுக்கு நாள் மேம்படும் என்றும் நம்பிக்கையுடன் கூறியதாக தற்பொழுது ஜித்தேஷ் ஷர்மா கூறியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு கோப்பையை கைப்பற்ற வேண்டும்
மேலும் பேசிய ஜித்தேஷ் ஷர்மா, என்னுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய முழு கவனம் இருக்கும். அணியின் வெற்றிக்கு என்னுடைய பங்களிப்பு அதிக அளவில் இருந்தால் நான் பெரிதும் சந்தோஷப்படுவேன். நடப்பு ஐபிஎல் தொடரில் நிறைய வெற்றிகளை பெற்று பஞ்சாப் அணி முதல் கோப்பையை கைப்பற்ற வேண்டும். அதுவே தற்போது தன்னுடைய முதல் குறிக்கோள் என்றும் ஜித்தேஷ் ஷர்மா கூறியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடந்த முடிந்த ஆட்டத்தில் ஜித்தேஷ் ஷர்மா 11 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.