ஆசியக் கோப்பை மற்றும் மெடலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் பிசிசிஐ தன்னிடமிருந்து தாராளமாக பெற்றுக் கொள்ளலாம் என மொஹ்சின் நக்வி கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே சமயத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மேனாகவும் இருக்கும் மொஹ்சின் நக்வி கைகளால் கோப்பை மற்றும் மெடலை வாங்க முடியாது என மறுத்துவிட்டது. இதன் காரணமாக கோப்பை மற்றும் மெடல் தற்பொழுது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் இருக்கிறது.
மன்னிப்பு கேட்டாரா?
இந்திய ஊடகங்களில் மொஹ்சின் நக்வி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது அவர் இது இந்திய ஊடகத்தால் இந்திய மக்களை தவறாக வழி நடத்துவதற்காக பரப்பப்படும் பொய் செய்தி என மறுத்திருக்கிறார்.
அதேசமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆசிய கோப்பை மற்றும் மெடல்கள் வேண்டுமென்றால் தாராளமாக ஆசிரியர் கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் 72 மணி நேரத்தில் கோப்பை மற்றும் மெடலை ஒப்படைக்க வேண்டும் என கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கேட்கவில்லை
இதுகுறித்து மொஹ்சின் நக்வி கூறும்பொழுது “இந்திய ஊடகங்கள் பொய்யையே மையமாகக் கொண்டிருக்கின்றன. நான் இந்த விஷயத்தில் எந்த தவறும் செய்ய கிடையாது. நான் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை. அப்படி எப்பொழுதும் செய்ய மாட்டேன். இது முட்டாள்தனமான மலிவான பிரச்சாரம். இது அவர்களின் சொந்த மக்களை தவறாக வழி நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தியா கிரிக்கெட்டில் அரசியலை இழுத்து விளையாட்டின் உணர்வை சேதப்படுத்துகிறது”
இதையும் படிங்க : IND vs WI: முதல் டெஸ்ட்டிக்கான ஆடுகளம்.. பார்முலாவை மாற்றும் கில்.. போட்டி குறித்து நம்பிக்கை
“ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நான் அப்பொழுதே கோப்பையை அவர்களிடம் ஒப்படைக்க தயாராகவே இருந்தேன். இப்போதும் நான் தயாராகவே இருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே வேண்டுமென்று விரும்பினால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






