நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் அமெரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பவுலர் முகமது சிராஜ் இறுதியாக தான் டி20 அணியில் இணைந்தது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
மும்பை வான்கடேவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 49 பந்துகள் விளையாடி 10 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 84 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு விளையாடிய அமெரிக்க அணிக்கு முகமது சிராஜ் பெரிய ஆபத்தாக அமைந்தார்.
தொடக்க விக்கெட்டுகள் இரண்டையும் வீழ்த்திய சிராஜ், முக்கியமான சமயத்தில் 37 ரன்கள் குவித்த சுபம் ரஞ்சன் விக்கெட்டை வீழ்த்தி மொத்தமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அமெரிக்க அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் மூலமாக இந்திய அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை அணியில் இல்லாத முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா இறுதி கட்டத்தில் ஏற்பட்ட காயத்தால் மாற்று வீரராக அணிக்குள் வந்து சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் போட்டிக்கு பின்னர் பேசிய அவர், தான் இந்திய அணியில் எப்படி நுழைந்தேன் என்று சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நேற்று எனக்கு கேப்டன் சூர்யா பாய் இடமிருந்து அழைப்பு வந்தது. உனது பொருட்களை எடுத்துக் கொண்டு உடனடியாக இந்திய அணியில் சேரு என்றார். உடனே நான் சூர்யாபாவிடம் விளையாடாதே என்று கூறினேன். ஏனென்றால் அவரிடம் நகைச்சுவை செய்கிறார் என்று நினைத்தேன். சொந்த மண்ணில் டி20 உலக கோப்பை விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அது எப்படியோ எழுதப்பட்டிருக்கிறது அதனால் நான் இங்கே இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.






