பட்லரின் விக்கெட்டை எடுக்க சிராஜ் இதைச் செய்திருக்க வேண்டும் – பெங்களூர் அணியின் தோல்வி குறித்து சச்சின்‍ விரிவான அலசல்

0
89
Mohammad Siraj and Sachin Tendulkar

இந்த வருட ஐ.பி.எல் சீசனில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை முதலாவது தகுதிசுற்றுப் போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. நேற்று குஜராத் அணியோடு இறுதி போட்டியில் மோதும் அணியைத் தீர்மானிப்பதற்கான இரண்டாவது தகுதிசுற்றுப் போட்டி, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில், ராஜஸ்தான் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்ப, ரஜத் பட்டிதாரின் துணையோடு அந்த அணி இருபது ஓவர்களில் 157 ரன்களை சேர்த்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் சதத்தால் வெகு எளிதாய் பெங்களூர் அணியை 18.1 ஓவரில் வீழ்த்தி இறுதிபோட்டிக்குத் தகுதி பெற்றது. குஜராத் ராஜஸ்தான் அணிகள் மோதும் இறுதிபோட்டி நாளை இதே மைதானத்தில் எட்டு மணிக்குத் துவங்குகிறது.

- Advertisement -

இந்த ஆட்டம் குறித்து உலக கிரிக்கெட்டின் மிகப் பிரபலமான வீரரான சச்சின் தனது விரிவான கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் “பிரசித் கிருஷ்ணா பந்தை இருபக்கமும் போகச் செய்தார். பந்து ஒரேமாதிரி வந்து கொண்டிருந்தால், பந்தை விடுவது எளிது. ஆனால் அவர் இருபுறமும் வீசியதுதால் பேட்ஸ்மேன்களால் விடமுடியவில்லை. விராட்கோலிக்கு ஒரு பந்து அவர் தொடையைத் தாக்கியது. அவர் விக்கெட்டை இழந்த பந்து பவுன்சராய் வெளியே சென்றது. தினேஷ்கார்த்திக்கை வீழ்த்திவிட்டு அடுத்து ஹசரங்காவைவை வீழ்த்தியது சிறப்பான பந்துவீச்சு. பிரசித் கிருஷ்ணாவும், மெக்காயும் நேற்று ராஜஸ்தான் அணியின் கீ பவுலர்களாக இருந்தார்கள்” என்றார்.

இதேபோல் சிராஜ் பந்துவீச்சைப் பற்றி பேசிய அவர் “சிராஜ் பட்லருக்கு எதிராக ஒரு தந்திரத்தைத் தவற விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவர் பட்லருக்குச் சரியான அவுட் ஸ்விங்கரை வீசவில்லை. அவர் கிராஸ் ஸீமில் தொடர்ந்து பந்தை உள்நோக்கி போகும் இன்-கட்டர்களையே வீசினார். அவர் சரியான ஒரு அவுட் ஸ்விங்கரை வீசி இருக்கலாம்” என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் நேற்றைய போட்டியில் சதமடித்து அசத்திய ஜோஸ் பட்லரின் பேட்டிங் பற்றி சச்சின் “அவர் தொடர்ந்து பேட் செய்யும் போது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிளது. ஒவ்வொரு பந்திலும் ஏதாவது ஒன்று சிறப்பாய் நடக்கிறது. அவர் கணிக்க முடியாத வீரராக இருக்கிறார். அவர் பைன்-லெக், தேர்ட்-மேன், லாங்-ஆன் என எல்லாத் திசைகளிலும் பந்தை அடித்தார். ஒரு திசையில் மட்டுமே அவர் ஆடுவதில்லை. அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன். அவர் பேட் வீச்சும், கால் நகர்வும் அபாரமானது” என்றார்.

- Advertisement -

ஆட்டத்தைப் பற்றி மேலும் பேசிய அவர் “இந்த ஆடுகளத்தில் 157 ரன்கள் என்பது போதாது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பெங்களூர் அணி பேட்ஸ்மேன்களை அழுத்தத்திலேயே கடைசிவரை வைத்திருந்தார்கள். யாஷஸ்வி ஜெய்ஸ்வார் எடுத்ததும் அதிரடியாக ஆடி பட்லரை ரிலாக்ஸ் செய்யவிட்டார். ஏழு பந்துகளில் ஆறு ரன்களை மட்டுமே எடுத்த பட்லர், பின்பு ரன்களை கசியவிடும் பவுலர் யாரென்று பார்த்து சிராஜை அடித்தார். பவர்ப்ளேவில் அணியாக அரைசதத்தைக் கடந்து, அடுத்து சஞ்சு சாம்சனோடு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். மூன்று விக்கெட்டுகளை பெங்களூர் அணி பவுலர்கள் வீழ்த்தினாலும் அது போதுமானதில்லை. மொத்தத்தில் ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வென்றனர்” என்று பாராட்டி இருக்கிறார்!