இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தில் இருந்து ரஞ்சி டிராபிக்கு தன் மாநில அணியான பெங்கால் அணிக்கு திரும்பி வரவில்லை. இதன் காரணமாக உடல் தகுதி குறித்து நிறைய கேள்விகள் எழுந்திருக்கிறது.
இந்திய அணி அடுத்த மாதம் மிக முக்கியமான டெஸ்ட் தொடரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. இந்த நிலையில் முகமது ஷமி வருகை மிகவும் தாமதமாகி கொண்டே செல்கிறது.
தியாகத்தால் வந்த மோசமான காயம்
முகமது ஷமிக்கு 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போதே பெரிய காயம் காலில் இருந்தது. அப்போது அனுபவம் வாய்ந்த அவர் விலகினால் அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என, அவர் காயத்திற்கு ஊசி போட்டுக் கொண்டு விளையாடினார்.
இதன் காரணமாக அவருடைய காயம் பெரிதானது. மேலும் அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பினார். பெரிய காயத்திற்கான அறுவை சிகிச்சை என்பதால் மீண்டு வருவதற்கு அவருக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. அவர் பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட இன்னும் போட்டியில் விளையாடுவதற்கான உடல் தகுதியை எட்டவில்லை என்பதாகவே தெரிகிறது.
சொன்னதைச் செய்த முகமது ஷமி
இந்த நிலையில் முகமது ஷமி சில வாரங்களுக்கு முன்பாக பேசியிருந்த பொழுது காயம் குணமடைந்து 100% தன்னால் விளையாட முடியும் என்று நம்பும் பொழுதுதான் தான் விளையாட வருவேன் எனவும், அதற்கு முன்பாக எந்த காரணத்திற்காகவும் நான் எந்த அணிக்கும் திரும்பி வரமாட்டேன் எனவும் மிக உறுதியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான பெங்கால் அணியில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை. இதன் மூலம் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் களம் இறங்க மாட்டார் என்று தெரிந்து விட்டது. அதே சமயத்தில் இந்திய அணிக்கு வருவதற்கு முன்பாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : மயங்க் யாதவ் பெருசா ஒன்னும் பண்ணல.. ஆஸிக்கு அவர் போக முடியாது.. இவரே போகணும் – ஆர்பி சிங் கருத்து
தற்போது அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாத காரணத்தினால் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. பிறகு ரஞ்சி சீசனில் அடுத்த கட்டத்தில் பெங்கால் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலியா தொடருக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






