இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சமீபத்தில் ஐசிசிக்கு மிகவும் முக்கியமான ஒரு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். தற்பொழுது அவர் கூறியதற்கு ஆதரவாக டிம் சவுதி மற்றும் பிலாண்டர் ஆகியோரும் களத்தில் குதித்து இருக்கிறார்கள்.
இந்திய அணி தற்போது துபாயில் சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மோத இருக்கிறது. இந்தத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய முகமது ஷமி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஒரு விதியை மீண்டும் ஐசிசி கொண்டுவர வேண்டும் என்று கேட்டிருந்தார்.
கோவிட் பெருந்தொற்று பரவிய காலத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் சில முக்கிய கட்டுப்பாடுகளை ஐசிசி கொண்டு வந்திருந்தது. அதில் வீரர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தது மிகவும் வீரர்களை மனச்சோர்வுக்கு உள்ளாக்குவதாக அமைந்தது. பின்பு கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததும் வீரர்கள் வழக்கம்போல சுதந்திரமாக இருக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் கோவிட் காலத்தில் கொண்டுவரப்பட்டதில் ஒரு தடையை மட்டும் ஐசிசி அப்படியே பின்பற்ற ஆரம்பித்துவிட்டது. அதாவது பந்துவீச்சாளர்கள் பந்தை பளபளப்பாக்க தங்களின் உமிழ் நீரை பயன்படுத்துவார்கள். இதற்கு கோவிட் பெருந்தொற்று காலத்தில் தடை விதித்திருந்த ஐசிசி தொடர்ந்து இந்த தடையை அப்படியே பின்பற்றி வருகிறது.
பந்துவீச்சாளர்கள் பந்தின் மீது தங்களின் உமிழ்நீரை வைத்துத் தேய்கின்ற காரணத்தினால் பந்து பளபளப்பாக மாறும். அதே சமயத்தில் இன்னொரு பக்கம் பந்து தேய்ந்து கடினமாகவும் இருக்கும். இதன் காரணமாக பந்தின் ஒரு பக்கம் எடை கூடுவதும் ஒரு பக்கம் எடை குறைவதும் நடப்பதால், பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு உதவியாக அமைகிறது. இது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இறுதி கட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாகவே உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க : ரோகித் கிரிக்கெட் எதிர்காலம்.. கேப்டனுக்கு கோலியிடம் பேசும் பிசிஐஐ.. மேலும் 2 வீரர்கள் – வெளியான தகவல்கள்
தற்போது கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக முழுமையாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் முகமது ஷமியின் இந்த கோரிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு நியூசிலாந்து முன்னாள் வேகபபந்துவீச்சாளர் டிம் சவுதி மற்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் பிலாண்டர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இதன் காரணமாக ஐசிசி இதில் மாற்றம் கொண்டு வருமா? என்கின்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.