ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்குப் பிறகு சாம்சன் மற்றும் ஷுப்மன் கில் இடையிலான விவாதம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப்
தெரிவித்தார். நவம்பர் 6 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து பேசிய கையிப், “சாம்சன் விளையாடியிருந்தால் குழப்பமே இருக்காது. ஆனால் துணைக் கேப்டனான ஷுப்மன் கில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதால் சாம்சன் ஒதுக்கப்பட்டது போல் தெரிகிறது. ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் ஜிதேஷ் ஷர்மாவை சாம்சனை விட சிறந்த ஃபினிஷராகப் பார்க்கிறார்கள்.”
சாம்சனுக்கு பாதிப்பு:
“இது ஜித்தேஷ் ஷர்மாவுக்கு சாதகமாக அமைகிறது. ஆனால் கில் எதிர்காலக் கேப்டனாகவும் வீரராகவும் தயார்படுத்தப்படுவதால் சாம்சன் இடத்தை இழந்துவிட்டார். சாம்சன் பேட்டிங் சாதனை சிறப்பானது, ஸ்ட்ரைக் ரேட் 150க்கு அருகில் உள்ளது. ஆனால் இப்போது பேட்டிங் ஆர்டர் பொசிஷன் அடிப்படையில் வீரர்களை ஆதரிக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தொடரில் இதுவரை நான்கு டி20 போட்டிகளில் சாம்சன் வெறும் இரண்டில் மட்டுமே விளையாடியுள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ஜிதேஷ் ஷர்மா விளையாடியதால் சாம்சன் மிடில் ஆர்டர் இடத்தை இழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் இருக்கும் நிலையில் கில் என்ன செய்ய வேண்டும் என முகமது கைஃப் அறிவுரை வழங்கினார்.
“கில் எதிர்காலக் கேப்டனாக ஆதரிக்கப்படுகிறார். அனைத்துப் போட்டிகளிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர் நல்ல வீரர் இல்லை என்று அர்த்தமல்ல. காரணமின்றி ஆதரிக்கவில்லை. குஜராத்துக்கு ஐபிஎல்லில் நன்றாக விளையாடியுள்ளார்”.
கில் என்ன செய்யனும்?:
” டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நல்ல சராசரி உள்ளது. வீரராக அவருக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் டி20யில் சிறந்த ஃபார்முக்கு இன்னும் நேரம் எடுக்கிறார். கில்லுக்கு பெரிய இன்னிங்ஸ் இல்லை.ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பு பல போட்டிகள் உள்ளன. மேன் ஆஃப் தி மேட்ச் அல்லது மேன் ஆஃப் தி சீரிஸ் போன்ற செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அழுத்தம் குறையும். அதன்பிறகு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் பற்றி பேச்சு குறையும்,” என்றார்.
இதையும் படிங்க: ஹாங்காங் சிக்ஸஸ்.. வெறும் 2 ரன்.. பாகிஸ்தானை வீழ்த்திய தினேஷ் கார்த்திக்கின் இந்திய அணி
“தென்னாப்பிரிக்கா தொடரில் கில்லை ஓய்வு கொடுத்தால், ஜெய்ஸ்வால் வந்து ரன் குவித்தால் அல்லது சாம்சன் ஓப்பன் செய்து அடித்தால் கேள்விகள் அதிகரிக்கும். ஜெய்ஸ்வால் போன்ற ஒருவரை முயற்சிக்கலாம். அது தவறான முடிவு இல்லை. இந்த இருவரையும் முயற்சித்தால் உலகக்கோப்பைக்கு முன் தெளிவாகும். மூவரையும் பார்த்து, உலகக்கோப்பைக்கு யார் சிறப்பாக செயல்பட முடியும் எனத் தெரிந்துகொள்ளலாம்,” என்றார்.






