யாரையும் அவமானப்படுத்தாதிர்கள் – ட்வீட்டரில் முகமது ஹபீஸ் இந்திய ரசிகர்களிடம் வேண்டுகோள்!

0
123
Mohammed Hafeez

கிரிக்கெட் உலகில் நேற்று ஒரு மிக முக்கியமான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டி அந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் வழக்கமான போட்டிகளை விட அதிக திருப்பங்களையும் பரபரப்புகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. அந்தப் போட்டியில் தோற்கும் அணியில் தவறு செய்த வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு சொந்த நாட்டு ரசிகர்களிடம் சிக்குவார்கள்.

அந்தப் போட்டி நேற்று ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதிய போட்டி. தோற்ற அணி இந்திய அணி. தவறு செய்து சொந்த நாட்டு ரசிகர்களிடம் விமர்சனத்திற்கு சிக்கிய வீரர் இந்திய அணியின் இளம் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங்!

- Advertisement -

நேற்று 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில், ஆட்டத்தின் 18-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்டு ஆடிய பாகிஸ்தான் அணியின் வலதுகை பேட்ஸ்மேன் ஆசிப் அலி பந்தை சிக்சருக்கு அடிக்க முயல, பந்து எட்ஜ் எடுத்து காற்றில் மேலே கிளம்பியது. அது ஆப் சைட் கல்லி திசையில் நின்றிருந்த அர்ஸ்தீப் சிங் கைகளில் எளிதான கேட்ச் ஆக விழுந்தது. ஆனால் அதை அவர் தவறவிட்டு விட்டார். மைதானத்தில் அமர்ந்து இருந்த இந்திய ரசிகர்களுக்கு மட்டும் அல்லாது, தொலைக்காட்சியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த பல கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கும் அதை நம்ப முடியவில்லை.

இதற்குப் பிறகு அடுத்து புவனேஸ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர் பவுண்டரி அடித்து ஆசிப் அலி வெற்றியை எளிதாக்கினார். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு அர்ஸ்தீப் சிங்தான் காரணம் என்று, அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதை கண்டித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டரில் ” அந்த இளைஞரை விமர்சிப்பதை நிறுத்துங்கள். யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிட மாட்டார்கள். எங்கள் வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணியின் சொந்த நாட்டு வீரரை இழிவுபடுத்துவது மலிவானது அவமானம் ஆனது. அர்ஸ் எங்கள் தங்கம்” என்று பதிலடி தந்து ஆதரவாக நின்றார்.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் அர்ஸ்தீப் சிங்குக்கு தனது ஆதரவை தெரிவித்து இந்திய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை டுவிட்டரில் வைத்திருக்கிறார். அதில் அவர் ” இந்திய அணி ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஒரு வேண்டுகோள், விளையாட்டில் மனிதர்களாகிய நாம் அனைவரும் தவறு செய்கிறோம். தயவுசெய்து இந்த தவறுகளுக்காக யாரையும் அவமானப் படுத்தாதீர்கள் ” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முகமது ஹபீஸின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த ஒரு ரசிகர் “இதைப் புரிந்துகொள்ள ஒரு பரந்த மனப்பான்மை தேவை. இது இங்கே தெளிவாக இல்லை. அர்ஸ்தீப் சிங்குக்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்!