ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இதில் ஆப்கானிஸ்தான் அணி வீரரான முகமது நபி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சிறப்பான ஒரு வரலாற்றுச் சாதனையை கிரிக்கெட் உலகில் படைத்திருக்கிறார்.
சார்ஜாவில் நடைபெற்று வரும் இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 33.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதில் பரூக்கி நான்கு விக்கெட்டுகளும், கஜன்பார் மூன்று விக்கெட்டுகளும் ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 26 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெறுகிற முதல் வெற்றியாகும்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணி வீரரான முகமது நபி ஒரு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார். ஒரு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரராக முகமது நபிக்கு வெவ்வேறு அணிகளுடன் இது 46வது சர்வதேச வெற்றியாக அமைந்திருக்கிறது. முகமது நபி 2009ம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகமானார். அதன் பின்னர் தன்னை அணியில் ஒரு முக்கிய வீரராக நிலை நிறுத்திக் கொண்டார்.
மேலும் ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் ஒரு கேப்டனாக 2014ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறார். 162 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 169 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னை சேப்பாக்கத்தில் பிட்ச் ட்விஸ்ட்.. அதிரடி முடிவெடுத்த இந்தியா.. முதல் பேட்டிங்.. முக்கிய மாற்றம்
முகமது நபி வெற்றி பெற்ற 46 வெவ்வேறு அணிகளின் பட்டியல் :
டென்மார்க், பஹ்ரைன், மலேசியா, சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், தாய்லாந்து, ஜப்பான், பஹாமாஸ், போட்ஸ்வானா, ஜெர்சி, பிஜி, தான்சானியா, இத்தாலி, அர்ஜென்டினா, பப்புவா நியூ கினியா, கேமன் தீவுகள், ஓமன், சீனா, சிங்கப்பூர், பாகிஸ்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ, அமெரிக்கா, பூட்டான், மாலத்தீவு, பார்படாஸ், உகாண்டா, பெர்முடா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, கனடா, கென்யா, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா.