ஒரு தொடரில் தோல்வியடைந்ததை தாண்டி தனிப்பட்ட வீரர்களின் வெற்றியை கொண்டாட தன்னால் முடியாது என பயிற்சியாளர் கம்பீர் கூறி இருந்ததற்கு தற்போது முகமது கைப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை தோற்று இந்திய அணி தொடரை இழந்தது. மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா சதம் மற்றும் விராட் கோலி அரை சதம் என ஆட்டமிழக்காமல் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள். இதனால் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆவதில் இருந்து தப்பித்து டி20 தொடருக்கு சென்றது.
கம்பீர் தெரிவித்த கருத்து
இந்த நிலையில் கவுதம் கம்பீர் ரோகித் சர்மா சதமும் விராட் கோலி அரை சதமும் அடித்து இருந்தாலும் கூட, அந்தத் தொடரை நாம் இழந்துவிட்டோம் என்பதால், தொடரில் ஏற்பட்ட தோல்வியை தாண்டி தன்னால் தனிப்பட்ட நபர்களின் வெற்றியை ஒரு பயிற்சியாளராக கொண்டாட முடியாது என கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசி உள்ள முகமது கைஃப் கூறும் பொழுது “100 ரன்கள் எடுத்ததற்கு மரியாதை இருக்க வேண்டுமா இல்லையா? போட்டியை வென்ற ஒரு சதத்திற்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அதை கம்பீர் கொண்டாட விட்டாலும் கூட மக்கள் கொண்டாடி விட்டார்கள். அந்தப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஆட்டம் இழக்காமல் விளையாடி வென்று, இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகாமல் காப்பாற்றினார்கள்”
அது முக்கியமான ஆட்டம்தான்
“இதுவே இந்திய அணி மூன்று போட்டிகளையும் மொத்தமாக தோற்று இருந்தால் அதற்கான எதிர்வினை இந்தியாவில் வித்தியாசமாக இருந்திருக்கும். அந்த கடைசி போட்டியில் வென்றதின் மூலமாக அவர்கள் இருவரும் தங்களுடைய பெருமையை காப்பாற்றிக் கொண்டார்கள். கடைசியில் ஒரு வெற்றியுடன் முடித்ததால் ஒயிட் வாஷ் இல்லாமல், அடுத்து டி20 தொடருக்கு செல்வதற்கு நல்ல உத்வேகத்தை அது கொடுத்தது”
இதையும் படிங்க : சாம்சன் நீ சிஎஸ்கேவுக்கு வராதே.. இவங்க ஜடேஜாவை விட்டு பெரிய தப்பு பண்ணிட்டாங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“எனவே நாம் ஒருநாள் தொடரை இழந்து விட்டோம் என்பது முழுமையான செய்தியை சொல்லாது. ஏனென்றால் அவர்கள் அந்த போட்டியை வென்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்தார்கள். முழுமையாக தோல்வி அடைவதில் இருந்து காப்பாற்றினார்கள். இதுவே முழுமையாக தோற்று அடுத்து டி20 தொடருக்கு சென்று இருந்தால் அதன் அழுத்தமே வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






