இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்களாதேஷ் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹமானை ஆட வைக்கக் கூடாது என அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசியிருக்கிறார்.
தற்போது பங்களாதேஷில் உள்நாட்டு சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதில் இந்தியாவுக்கு விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக பங்களாதேஷ் வீரரை ஐபிஎல் தொடரில் விளையாட விடக்கூடாது என வெளியில் இருந்து அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கிறது.
எனக்கு இது தெரியாது
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அழுத்தம் அதிகரித்த காரணத்தினால், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதே போல பங்களாதேஷ் வீரரையும் விளையாட வைக்க கூடாது என அழுத்தங்கள் வெளியில் இருந்து உருவாக்கப்பட்டு வருகிறது. முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒன்பது கோடிக்கு மேல் கொடுத்து வாங்கி இருக்கிறது.
இது குறித்து முகமது கைஃப் பேசும் பொழுது “இந்த விஷயம் குறித்து எனக்கு நிறைய தெரியாது. நான் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக துபாயில் இருந்து வருகிறேன். இதன் கட்டுப்பாடுகள் எல்லாமே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கைகளில் இருக்கிறது. அவர்கள் இதுகுறித்து முடிவு எடுப்பார்கள்”
நாம் எதையும் உருவாக்க கூடாது
“இது உணர்ச்சிகரமான பிரச்சனை என்கின்ற காரணத்தினால் நான் இங்கு உட்கார்ந்து கொண்டு எதையும் சொல்ல மாட்டேன். என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நாம் காத்திருக்க வேண்டும். நாம் இதுகுறித்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அங்கு என்ன முடிவுகள் எடுக்கப்படுகிறது? என்று நமக்கு தெரியாது”
இதையும் படிங்க : இந்தியா பங்களாதேஷ் புதிய 2 தொடர்கள்.. போட்டி அட்டவணை வெளியீடு.. மாற்றம் நடந்தது ஏன்? முழு தகவல்கள்
“எனவே நாம் இது குறித்து தேவையில்லாத கருத்துக்களை பரப்பக் கூடாது. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும் அங்கே இந்திய கிரிக்கெட் வாரியம் இருக்கிறது. அவர்களுக்கு பெரிய லீக்குகளை நடத்திய அனுபவம் இருக்கிறது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்? என்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.






