இந்திய டி20 அணியில் கில்லை தேர்வு செய்ததின் மூலமாக ஆரம்பத்திலேயே இந்திய கிரிக்கெட்டை பின் தங்கச் செய்து விட்டார்கள் என முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து கில் நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை விட சிறந்த வீரர்கள் இருந்தபோதிலும் அவரை தேர்வு செய்தது தான் தவறான விஷயம் என சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் கில் இடத்திற்கு ஜெய்ஸ்வால் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் பின்தங்கி விட்டது
தற்பொழுது ஜிதேஷ் சர்மாவை நீக்கி இஷான் கிஷானை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் சஞ்சு சாம்சனை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் ஜிதேஷ் சர்மாவை வைத்துக்கொண்டு கில் இடத்திற்கு ஜெய்ஸ்வாலை தேர்வு செய்து, அவரையே தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்தி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முகமது கைஃப் பேசும் பொழுது “நான் இந்திய டி20 கிரிக்கெட் பற்றி பேசுகிறேன். கில்லை விட இந்த வடிவத்திற்கு சிறந்த வீரர்கள் வெளியில் இருந்தார்கள். எனவே அவரை முதலில் தேர்வு செய்தது தேர்வாளர்களின் தவறு. இதனால் இந்திய கிரிக்கெட் பின்தங்கி விட்டது. நீங்கள் கில்லுக்கு வாய்ப்பு கொடுத்த இந்த இரண்டு மூன்று மாதங்களில், ஜெய்ஸ்வால், சாம்சன், ஜிதேஷ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்”
துணை கேப்டனுக்கும் இழப்புதான்
“தற்போது துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டு இருக்கும் அக்சர் படேலுக்கும் இது ஒரு இழப்புதான். அணி தற்போது வலிமையாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த அவரையே தொடர்ந்து இருக்க விட்டிருந்தால், தற்போது அவர் தலைமைத்துவத்தில் வேலை செய்து அனுபவம் பெற்று இருப்பார். அணி கூட்டங்களிலும் அவர் பங்கு எடுத்திருப்பார்”
இதையும் படிங்க : கேலி செய்த பாகிஸ்தான் ரசிகர்கள்.. 14 வயது சூரியவன்சி செய்த காரியம்.. சிறுவனிடம் கூடவா இப்படி – என்ன நடந்தது?
“மேலும் இந்த இரண்டு மூன்று மாதங்களில் அக்சர் படேல் துணை கேப்டனாகவே தொடர்ந்திருந்தால், ஒருவேளை கேப்டன் சூரியகுமார் யாதவ் காயம்பட்டிருந்தால், இவர் கேப்டன் பொறுப்புக்கு வந்து செயலாற்றி தன்னுடைய வீரர்களை இன்னும் நன்றாக அறிந்திருக்க முடியும். அவர் தன்னுடைய துணை கேப்டன் பொறுப்புக்கு இன்னும் நல்ல முறையில் தயாராகி இருக்க முடியும். இந்த வாய்ப்பும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.






